சுய வேலைவாய்ப்பில் மானியங்களை விரைந்து வழங்க அமைச்சர் வலியுறுத்தல்
சென்னை:சுய வேலைவாய்ப்பு திட்டங்களில் மாற்றுத்திறனாளிகள், மகளிருக்கு அதிகளவில் கடன் வழங்குவதுடன், பயனாளிகளுக்கு மானிய தொகையை விரைந்து வழங்குமாறு, மாவட்ட தொழில் மைய அதிகாரிகளை, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் வலியுறுத்தியுள்ளார். தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறை செயல்பாடுகள் குறித்து, அமைச்சர் அன்பரசன், அதிகாரிகளுடன் சென்னை கிண்டியில் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில் துறைச்செயலர் அதுல் ஆனந்த், 'சிட்கோ' மேலாண் இயக்குநர் கார்த்திக், தொழில் வணிக ஆணையர் நிர்மல்ராஜ் மற்றும் மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் அன்பரசன் பேசியதாவது: ஆறு சுயவேலைவாய்ப்பு திட்டங்கள் வாயிலாக, கடந்த நான்கரை ஆண்டுகளில், 66,018 பயனாளிகளுக்கு, 5,491 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு, அரசின் சார்பில், 2,133 கோடி ரூபாய் மானி யம் வழங்கப்பட்டுள்ளது. இதே காலத்தில் முதலீட்டு மானியம், மின் மானியம் உட்பட, பத்து வகையான மானிய திட்டங்களின் கீழ், 20,702 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 1,459 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறானிகள், மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு அதிக எண்ணிக்கையில் கடன் வழங்கப்பட வேண்டும். பயனாளிகளுக்கு, மானியத்தை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு திட்டத்திற்கும் நிர்ணயிக்கப்பட்டு உள்ள இலக்குகளை, வரும் டிசம்பருக்குள் முடித்துவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.