மும்பை பேப் எக்ஸ்போ - 2025 : திருப்பத்தை எதிர்பார்க்கும் திருப்பூர்
திருப்பூர் : மும்பையில் அடுத்த மாதம் நடக்கும், 5வது 'பேப் எக்ஸ்போ' கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் அதிநவீன 'பேப்ரிக்' ரகங்களால், பின்னலாடை உற்பத்தியில் புதிய திருப்பம் ஏற்படுமென, திருப்பூர் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.நாடு முழுதும் உள்ள பின்னல் துணி உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்து, மும்பையில் 'பேப் எக்ஸ்போ' என்ற பெயரில், துணி கண்காட்சி நடத்தப்படுகிறது. அவ்வகையில், 5வது கண்காட்சி, ஏப்., 21ம் தேதி துவங்குகிறது. இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கமான சைமா நிர்வாகிகள் கூறுகையில், 'திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு, புதிய ரக 'பேப்ரிக்' ரகங்கள் அவசியம் தேவைப்படுகின்றன. திருப்பூரில் உற்பத்தியை துவக்க மேலும் சில ஆண்டுகளாகும். 'அதுவரை, வடமாநில வியாபாரிகளிடம் துணி வாங்கி, நவீன ஆடை உற்பத்தியை துவக்கலாம். அதற்காகவே, துணி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து, ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளோம்,' என்றனர்.பாலியஸ்டர், நைலான் போன்ற செயற்கை நுாலிழையிலும், பின்னல் துணி உற்பத்தி செய்வது சாத்தியமாகி விட்டது. தமிழகம், செயற்கை நுாலிழை பின்னல் துணி உற்பத்தியில் பின்தங்கி இருக்கிறது. புதிய தொழில்நுட்பத்தால், வடமாநிலங்களில் உள்ள ஜவுளித் தொழில் நகரங்கள், 'பேப்ரிக்' உற்பத்தியில் முன்னேறுகின்றன. சீனா, வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, சாயமிடப்பட்ட புதுரக பின்னல் துணிகள், வடமாநிலங்களில் வேகமெடுத்துள்ளன. நவீன பின்னல் துணி உற்பத்தி, நாடு முழுதும் உள்ள உற்பத்தியாளர்களுக்கு சென்றடைய, இந்திய துணி உற்பத்தியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.