| ADDED : நவ 22, 2025 12:15 AM
கடந்த 2020ஆம் ஆண்டில் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள், தற்போதுதான் நடைமுறைக்கு வந்துள்ளன. தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்துவதற்காக மத்திய அரசு நான்கு தொழிலாளர் சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இவை, கடந்த 2020 அக்டோபர் 1ம் தேதி இயற்றப்பட்ட சட்டங்கள் ஆகும். அவை அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி, ஊதியச்சட்டம்- 2019, தொழில் உறவுச் சட்டம்-2020, சமூகப் பாதுகாப்புச் சட்டம்- 2020, தொழிலக பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய, பணிச்சூழல் சட்டம்- 2020 ஆகிய இச்சட்டங்கள் அறிமுகமாவதன் மூலம் பழைய 29 தொழிலாளர் சட்டங்கள் நீக்கப்படுகின்றன. நான்கு சட்டங்கள் 1 ஊதியச்சட்டம்-2019: ஏற்கனவே நடைமுறை யில் உள்ள நான்கு சட்டங்களுக்கு பதிலாக இச்சட்டம் கொண்டு வரப்படுகிறது. எல்லா ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் குறித்த நேரத்தில் சம்பளப் பட்டுவாடா ஆகிய அம்சங்களை ஒன்று சேர்த்து இச்சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 தொழிலக உறவுகள் சட்டம்-2020: மூன்று பழைய சட்டங்களை ஒருங்கிணைத்து இச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள், பணிச்சூழல், தொழில் தகராறு தொடர்பான விதிகளில் இது கவனம் செலுத்துகிறது. 3 சமூகப் பாதுகாப்புச் சட்டம்-2020: ஒன்பது சட்டங்களை ஒன்று சேர்த்து, முறைசார்ந்த மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்கு இ.பி.எப்., பென்ஷன் திட்டம் முதலிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை இது வழங்கும். 4 தொழிலக பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிச்சூழல் சட்டம்-2020: மொத்தம் 13 சட்டங்களை ஒருங்கிணைத்து, பணியிடப் பாதுகாப்பு, ஆரோக்கியம், பணிச்சூழல் (குறிப்பாக சுரங்கங் கள், தோட்டத் தொழில்களுக்கான சிறப்பு விதிகள் அடங்கியது) ஆகியவற்றைக் கொண்டது. கிடைப்பது என்ன? * உரிய நேரத்தில் குறைந்தபட்ச ஊதியம் * இளைஞர்களுக்கு நியமன கடிதம் கட்டாயம் * பெண்களுக்கு சம ஊதியம், மரியாதை * 40 கோடி தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு * குறித்த காலத்துக்கான ஊழியர்களுக்கு ஓராண்டுக்கு பிறகு பணிக்கொடை * 40 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு வருடாந்திர உடல் பரிசோதனை. -நமது சிறப்பு நிருபர்-