உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தங்க நகை தொழில் பூங்கா கட்டுமான பணிக்கு ஆணை

தங்க நகை தொழில் பூங்கா கட்டுமான பணிக்கு ஆணை

சென்னை:கோவை மாவட்டத்தில் உள்ள குறிச்சி தொழிற்பேட்டையில் தங்க நகை தொழில் பூங்கா கட்டும் பணிக்கான ஆணையை, 'புளூலீப்' என்ற தனியார் நிறுவனத்துக்கு தமிழக அரசின், 'சிட்கோ' நிறுவனம் வழங்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 20,000க்கும் மேற்பட்ட நகை பட்டறைகளில், கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பணிபுரிகின்றனர். அதிக மதிப்புள்ள நகைகளை தயாரிக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பாதுகாப்பு உள்ளிட்ட போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி உள்ளன. எனவே, அந்நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, கோவையில் உள்ள குறிச்சி தொழிற்பேட்டையில், 126 கோடி ரூபாயில் தங்க நகை தொழில் பூங்காவை, 'சிட்கோ' நிறுவனம் அமைக்க முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, நிலத்தின் மதிப்புடன் சேர்த்து, 81.40 கோடி ரூபாய் செலவில் தங்க நகை தொழில் பூங்கா கட்டுவதற்கு, கடந்த ஜூலையில், 'டெண்டர்' கோரப்பட்டது. கட்டுமான பணிக்கான திட்ட செலவு, 45 கோடி ரூபாய். மொத்தம், 1.40 லட்சம் சதுர அடியில் ஐந்து தளங்களுடன் தங்க நகை தொழில் பூங்கா கட்டப்பட உள்ளது. அங்கு, 300 தொழிற்கூட அலகுகள், பாதுகாப்பு பெட்டகம், பொது வசதி மையம் உள்ளிட்டவை இடம்பெற உள்ளன. டெண்டரில் ஐந்து நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், 'புளூலீப்' என்ற தனியார் நிறுவனம் தேர்வாகியுள்ளது. அடுத்த மாதம் முதல் வாரம், கட்டுமான பணிக்கு, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை