ஓசூரில் ரூ.210 கோடியில் பனட்டோனி தொழில் பூங்கா
சென்னை: ஓசூரில் 210 கோடி ரூபாய் முதலீட்டில், தொழில் மற்றும் தளவாட பூங்காவை அமைக்க இருப்பதாக, ரியல் எஸ்டேட் நிறுவனமான பனட்டோனி இந்தியா அறிவித்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட வணிக ரியல் எஸ்டேட் நிறுவனமான பனட்டோனி குழுமத்தின் இந்திய பிரிவு, பனட்டோனி இந்தியா. தொழில் விரிவாக்க நடவடிக்கையின் ஒருபகுதியாக, ஓசூரில் 25 ஏக்கர் பரப்பளவில், தொழில் மற்றும் தளவாட பூங்காவை அமைக்க இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இந்தியாவில் இந்நிறுவனம் செயல்படுத்தும் இரண்டாவது திட்டம் இது. ஏற்கனவே டில்லி என்.சி.ஆர்., பகுதியில் 3.60 லட்சம் சதுரடியில் தொழில் பூங்காவை அமைத்து வருகிறது.இது குறித்து பனட்டோனி இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சந்தீப் சந்தா தெரிவித்ததாவது:அதிக திறன் கொண்ட கிடங்குகள், முதல் நிலை நகரங்களில் வலுவான இடத்தை தக்கவைக்கும் நிறுவனத்தின் இலக்கை எட்டுவதற்காக ஓசூர் சந்தையில் நுழைந்து உள்ளோம். புதிய தொழில் பூங்கா 5.50 லட்சம் சதுரடி பரப்பளவில் அமைய உள்ளது. சில மாதங்களில் கட்டுமான பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்