யூலிப் திட்டத்தை மக்கள் வரவேற்கிறார்கள்
ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்ஷியல் லைப் நிறுவனத்தில் இருந்து புரூடென்ஷியல் நிறுவனம் வெளியேறிய நிலையில், ஐ.சி.ஐ.சி.ஐ., லைப் இன்சூரன்ஸ் என்ற புதிய பெயரில் காப்பீடு வணிகத்தை ஐ.சி.ஐ.சி.ஐ., தொடர்கிறது. இதற்கான பெயர் அறிமுக நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடைபெற்றது. புரூடென்ஷியல் நிறுவனம் முதலீட்டாளராக வெளியேறியிருந்தாலும், காப்பீடு துறையில் தங்கள் நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சியை தொடரும் என்று ஐ.சி.ஐ.சி.ஐ., லைப் இன்சூரன்ஸ் தென்னிந்திய பிரிவு தலைவர் மணிகண்டன் ராஜாமணி தெரிவித்தார். 'யூலிப்' திட்டங்களுக்கு முன்பை விட தற்போது சிறப்பான வரவேற்பு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். மினி பேட்டி நம் நாளிதழுக்கு மணிகண்டன் ராஜாமணி அளித்த பேட்டி: 'யூலிப்' திட்டங்களை எதற்காக மீண்டும் பிரபலப்படுத்துகிறீர்கள்? இத்திட்டங்களுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரை பிரீமியம் செலுத்துவோருக்கு, அவர்கள் ஈட்டும் வருவாய்க்கு வருமான வரி விலக்கு இருக்கிறது என்பதும் முக்கிய காரணம். முதலீடு + பாதுகாப்பு என்ற கோணத்திலேயே யூலிப் திட்டங்கள் மீது மக்களிடம் பார்வை இருக்கிறது. டெர்ம் பாலிசிகளின் வளர்ச்சியால், எண்டோமென்ட் பாலிசி விற்பனைக்கு பாதிப்பா? இல்லை. எண்டோமென்ட் பாலிசிகள், நீண்டகால அடிப்படையிலானவை; ஆயுள் பாதுகாப்பும் சேமிப்பும் இணைந்தவை. தடையின்றி அத்தகைய பாலிசிகள் தொடர்கின்றன. அவற்றின் விற்பனை பாதிக்கப்படுவதில்லை. முகவர் கமிஷன் செலவைக் குறைப்பது குறித்து இத்துறையில் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வருகிறதே? அப்படி ஒரு பேச்சு இருப்பது உண்மைதான். ஆனால், அதுகுறித்து எவ்விதமான முடிவையும் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ.,) எடுக்கவில்லை. வங்கிகள் வாயிலாக பாலிசிகளை விற்பனை செய்வது சாதகமான பலன்களைத் தருகிறதா? ஆம். எங்களது பாலிசி விற்பனையில் 27 சதவீதம், 52 வங்கிகள் வாயிலாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.