மக்களிடம் 2 லட்சம் கோடி ரூபாய் கையிருப்பு அதிகரிக்கும்
புதுடில்லி:சமீபத்திய ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்களால், மக்களிடம் இப்போது இருப்பதை விட, மொத்தம் 2 லட்சம் கோடி ரூபாய் பணம் கூடுதலாக இருக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்கள் விளக்க கூட்டத்தில் நிதியமைச்சர் தெரிவித்ததாவது: நுகர்வோர் மீதான வரிச் சுமையை குறைப்பதையும், பொருளாதாரத்தில் பணப் புழக்கத்தை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டே ஜி.எஸ்.டி., மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து துறையினரும் பயன் பெறுவார்கள். மக்களுக்கான பலன் இதை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும். இந்த சீர்திருத்தங்களால் சாமானிய மக்களின் கைகளில் 2 லட்சம் கோடி ரூபாய் பணம் கூடுதலாக இருக்கும். 12 சதவீத ஜி.எஸ்.டி.,யின் கீழ் உள்ள 99 சதவீத பொருட்கள் 5 சதவீத ஜி.எஸ்.டி., அடுக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.