புதுடில்லி: மத்திய அரசு திட்டமிட்டுள்ள ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்கள் குறித்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆறு பேர் அடங்கிய மாநில அமைச்சர்கள் குழுவிடம் நாளை எடுத்துரைக்க உள்ளார். நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக ஜி.எஸ்.டி., அடுக்குகள் குறைக்கப்பட உள்ளதாக, தன் சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து, 12 மற்றும் 28 சதவீத ஜி.எஸ்.டி., அடுக்குகள் முற்றிலுமாக நீக்கப்பட்டு, இவை 5 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி., அடுக்குகளின் கீழ் கொண்டு வரப்பட உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர, மிக ஆடம்பர மற்றும் புகையிலை பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்கள் குறித்து ஆராய, பீஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் அமைக்கப்பட்ட ஆறு பேர் அமைச்சர்கள் குழுவுக்கு, இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளையும், நாளை மறுநாளும் டில்லியில் நடைபெறவுள்ள அமைச்சர்கள் குழு கூட்டத்தில், இது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாகவும்; இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசின் முடிவு குறித்து விரிவாக எடுத்துரைப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காப்பீடு துறைக்கான ஜி.எஸ்.டி., தற்போதுள்ள 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் அல்லது பூஜ்ஜியமாக குறைக்கப்படலாம்
பங்கு சந்தைகளில் உற்சாகம்
ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்கள் குறித்த தகவலால், இந்திய பங்கு சந்தைகள் நேற்று 1 சதவீதம் உயர்ந்தன. வர்த்தக நேர துவக்கத்தில் சென்செக்ஸ் 1,168 புள்ளிகள் அதிகரித்தது. இறுதியில் 676 புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்தது. நிப்டி 1.58 சதவீதம் உயர்ந்து 25,000 புள்ளிகளை எட்டிய நிலையில், முடிவில் குறைந்தது. விலை குறையும் என எதிர்பார்க்கப்படும் பொருட்கள் 12% 5% மருந்து பொருட்கள் பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் மது அல்லாத பானங்கள் பால் பொருட்கள் ஆடைகள் ஹோட்டல் அறைகள் கட்டுமான பொருட்கள் 28% 18% ' ஏசி' பிரிஜ் சிமென்ட் 1,200 சி.சி.,க்கு குறைவான கார்கள் 500 சி.சி.,க்கு குறைவான டூ - வீலர்கள் 32 அங்குலத்துக்கு மேற்பட்ட 'டிவி'