நவ., துறைமுக சரக்கு போக்குவரத்து 4.95 சதவிகிதம் சரிவு
மும்பை:நாட்டின் முக்கிய துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து, கடந்த நவம்பரில் 4.95 சதவீதம் குறைந்து, 6.75 கோடி டன்னாக இருந்தது. இதுகுறித்து இந்திய துறைமுகங்கள் சங்கம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் 12 பெரிய துறைமுகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் இரண்டு துறைமுகங்கள் தவிர, மீதமுள்ள முக்கிய துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து கடந்த நவம்பர் மாதம் 4.95 சதவீதம் குறைந்து, 6.75 கோடி டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டு 7.11 கோடி டன்னாக இருந்தது. மதிப்பீட்டு மாதத்தில் ஜவஹர்லால் நேரு துறைமுகம் 12.34 சதவீதமும்; தீனதயாள் துறைமுகம் 10.10 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளன. பிற துறைமுகங்களான மோர்முகாவ், நியு மங்களூரு, சென்னை, விசாகப்பட்டினம், மும்பை துறைமுகம் உள்ளிட்டவை கடந்தாண்டைக் காட்டிலும், நடப்பாண்டு நவம்பரில் சரக்கு போக்குவரத்தில் சரிவைக் கண்டுள்ளன.இவ்வாறு தெரிவித்து உள்ளது.