மேலும் செய்திகள்
தொழில் கடன் 5.50 சதவிகிதமாக குறைவு
01-Aug-2025
மும்பை: ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 5.50 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. டிரம்ப்பின் வரிவிதிப்பு அச்சுறுத்தலுக்கு இடையே, மும்பையில் கடந்த 4ம் தேதி துவங்கி மூன்று நாட்களாக நடைபெற்று வந்த ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டம் நேற்று நிறைவடைந்தது. கூட்டத்தின் முடிவில், ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றமின்றி தொடர ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார். இதற்கு முந்தைய மூன்று பணக் கொள்கை குழு கூட்டங்களிலும், வட்டி விகிதம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜன் தன் முகாம்கள்
ஜ ன் தன் வங்கிக் கணக்கு திட்டம் துவங்கி 10 ஆண்டுகளுக்கும் மேலாகி உள்ள நிலையில், பல கணக்குகளுக்கும் மீண்டும் கே.ஒய்.சி., மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக கடந்த ஜூலை 1 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை, வங்கிகளின் சார்பில் பஞ்சாயத்து வார்டு அளவில் முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ள அவர் அறிவுறுத்தினார். அமெரிக்க வரி விதிப்பால் இந்திய பொருளாதாரத்துக்கு பெரிய பாதிப்பு இருக்கும் என நினைக்கவில்லை. உலக பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்காவைக் காட்டிலும், இந்தியா அதிக பங்களிப்பை வழங்கி வருகிறது. நாம் 18 சதவீதம் பங்களிப்பு வழங்குகிறோம், அதே நேரத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு 11 சதவீதமாகவே உள்ளது. நடப்பு நிதியாண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாக இருக்கும் என பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ள நிலையில், நம் நாட்டின் வளர்ச்சி 6.50 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் சவாலான சூழல் நிலவும் போதிலும், விலைவாசி கட்டுக்குள் உள்ளதால் இந்திய பொருளாதாரம் நிலையான வளர்ச்சிப் பாதையில் தொடர்கிறது. சீரான பருவமழை மற்றும் விரைவில் துவங்க உள்ள பண்டிகை காலம் பொருளாதாரத்துக்கு மேலும் உந்துதல் அளிக்கும். நிதி மற்றும் பணக் கொள்கைகள் ஒன்றுக்கு ஒன்று ஆதரவாக இருப்பதுடன், அரசின் மூலதன செலவினமும் வலுவாக உள்ளதால், தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரு நிறுவனங்கள் நிதி திரட்டுவதற்கு வங்கிகளைக் காட்டிலும், பத்திர சந்தையையே அதிகம் சார்ந்திருக்கின்றன. ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கையை, பணச் சந்தைகள் உடனடியாக பிரதிபலிப்பதால், நிறுவனங்கள் வங்கிக் கடனுக்காக காத்திருப்பதில்லை.
- சஞ்சய் மல்ஹோத்ரா கவர்னர், ரிசர்வ் வங்கி வட்டியை சேமிக்கலாம் ரெப்போ வட்டி விகிதம் உயராததால், குறைவாக நீடிக்கும் வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் பெறுவதற்கு நல்ல வாய்ப்பு என ரியல் எஸ்டேட் துறை வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நல்ல சிபில் ஸ்கோர் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு 8 சதவீதத்துக்கும் குறைவான வட்டியில் வீட்டுக் கடன் கிடைப்பதாகவும்; ஏற்கனவே இ.எம்.ஐ., செலுத்தி வருபவர்கள் குறிப்பிட்ட அளவிலான தொகையை முன்கூட்டியே செலுத்தி, வட்டியை சேமிக்க நல்ல வாய்ப்பு என்றும் தெரிவித்தனர். அப்போது தான் எதிர்காலத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது என அவர்கள் கூறினர். மேலும், அதிக வட்டி செலுத்தி வரும் வாடிக்கையாளர்கள், ரெப்போ தொடர்புடைய குறைவான வட்டி திட்டங்களுக்கு மாறுவதற்கு சிறந்த வாய்ப்பு என்றும் தெரிவித்தனர். வாடிக்கையாளர்களுக்கான மூன்று முக்கிய அறிவிப்புகள்
செட்டில்மென்ட் எளிதாகிறது இ றந்த வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள், லாக்கர் உடைமைகள் ஆகியவற்றை நாமினிகள் எளிதாக பெறுவதற்கு ஏதுவாக, இதுதொடர்பான நடைமுறைகளை ஒருங்கிணைக்க உள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். தற்போது ஒவ்வொரு வங்கியும் பிரத்யேக நடைமுறையை பின்பற்றி வரும் நிலையில், அனைத்து வங்கிகளையும் உள்ளடக்கிய வகையில், விரைவில் வரைவு சுற்றறிக்கை வெளியிட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என அவர் கூறினார். வாடிக்கையாளர் சேவைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், வங்கிகளுக்குச் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் நடைமுறைகளை சீரமைக்க இம்முடிவு செய்யப்பட்டுள்ளது. பத்திரங்களில் எஸ்.ஐ.பி., முதலீடு சி ல்லரை முதலீட்டாளர்கள், இனி அரசு கடன் பத்திரங்களில், எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்யலாம். இதற்காக 'ஆர்.பி.ஐ., ரீடெய்ல் டைரெக்ட்' தளத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில்லரை முதலீட்டாளர்கள் அரசு கடன் பத்திர ஏலங்களில் பங்கேற்கவும், பத்திர சந்தையில் வர்த்தகம் மேற்கொள்ளவும், ஆர்.பி.ஐ., ரீடெய்ல் டைரெக்ட், தளம், கடந்த 2021ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதை எளிதாக்கும் வகையில், தானியங்கி ஏல வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி, அரசு கடன் பத்திரங்களின் முதன்மை ஏலங்களில், முதலீட்டாளர்களால் குறிப்பிடப்படும் தொகைக்கு தானாகவே ஏலம் எடுக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதமாகவே தொடரும் * நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சி கணிப்பு 6.50 சதவீதமாகவே தொடர்கிறது * நடப்பு நிதியாண்டுக்கான பணவீக்க கணிப்பு 3.70 சதவீதத்திலிருந்து 3.10 சதவீதமாக குறைக்கப்படுகிறது * வட்டி குறைப்பு மக்களை இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. வங்கிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன * வங்கிகளின் நிகர வாராக் கடன் விகிதம் 0.50 - 0.60 சதவீதம் என்ற பராமரிக்கக் கூடிய அளவிலேயே உள்ளது * தொழில்துறை வளர்ச்சி மந்தமாகவும், சீரற்றதாகவும் உள்ளது * அடுத்த பணக் கொள்கை குழு கூட்டம் செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறும்.
01-Aug-2025