உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வாகனம், தங்க நகை கடன் பிரிவுகள் நிதி நிறுவனங்கள் வளர்ச்சிக்கு உதவும் ரிசர்வ் வங்கி கணிப்பு

வாகனம், தங்க நகை கடன் பிரிவுகள் நிதி நிறுவனங்கள் வளர்ச்சிக்கு உதவும் ரிசர்வ் வங்கி கணிப்பு

மும்பை:என்.பி.எப்.சி., எனும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வாகன கடன் மற்றும் தங்க நகை கடன் போன்ற பிரிவுகளில் வலுவான வளர்ச்சியை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்து உள்ளதாவது: வாகன விற்பனை அதிகரித்துள்ளதை தொடர்ந்து, வாகன கடன்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால், தங்கத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதனால், இப்பிரிவுகளில் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கடன் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு என்.பி.எப்.சி.,கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்நிறுவனங்கள் உள்கட்டமைப்பு, வாகனங்கள், வீடு மற்றும் நுகர்வோர் பொருட்களுக்கு கடன்களை வழங்கி, நாட்டின் ஒட்டுமொத்த தேவையை அதிகரித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றன. சமீபகாலமாக என்.பி.எப்.சி.,கள் தொழில் துறை மற்றும் சில்லரை வர்த்தக துறைகளுக்கு வழங்கும் கடன்களும் அதிகரித்துள்ளன. இவற்றின் வாயிலாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் என்.பி.எப்.சி.,களின் பங்கு உயர்ந்துள்ளது. மேலும், இந்நிறுவனங்களின் நிதி நிலை, லாபம் மற்றும் வாராக்கடன் உள்ளிட்ட முக்கிய நிதி குறியீடுகள் வலுவாகவே உள்ளன. கடந்த 2023 நவம்பரில், தனிநபர் கடன் உள்ளிட்ட பாதுகாப்பற்ற கடன்களுக்கு எதிராக ஒதுக்க வேண்டிய தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து, இப்பிரிவு கடன்களின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. என்.பி.எப்.சி.,கள் பெரும்பாலும் வங்கிகள் மற்றும் கடன் பத்திரங்கள் வாயிலாகவே நிதி திரட்டுகின்றன. ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை முடிவுகளை நிதித் துறை மற்றும் பொருளாதாரத்துக்கு எடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அண்மை காலமாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் போன்ற புதிய தொழில்நுட்பங்களை நிதித்துறை பின்பற்றி வருவதால், என்.பி.எப்.சி.,கள் சைபர் பாதுகாப்பில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. உள்கட்டமைப்பு, வாகனங்கள், வீடு மற்றும் நுகர்வோர் பொருட்களுக்கு கடன்களை வழங்கி, பொருளாதாரம், வேலைவாய்ப்புக்கு என்.பி.எப்.சி.,க்கள் உதவி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை