இந்திய இளைஞர்களின் ஓய்வுகால விருப்பம்
இந்திய இளம் தலைமுறையினரில் பெரும்பாலானோர் முன்னதாகவே ஓய்வு பெற விரும்புவதோடு, அதிக அளவில் பென்ஷனை எதிர்பார்ப்பதும் ஆய்வில் தெரிய வந்து உள்ளது. ஓய்வுகால திட்டமிடல் தொடர்பாக அறிவதற்காக, 'கிராண்ட் தார்ன்டன் பாரத்' நிறுவனம் இந்திய அளவில் பல்வேறு தரப்பினர் மத்தியில் நடத்திய ஆய்வில், பங்கேற்றவர் களில் 55 சதவீதம் பேருக்கு மேல் ஓய்வு காலத்தில் மாதம் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பென்ஷன் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.எனினும், இவர்கள் மேற்கொண்டுள்ள சேமிப்பு இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் அமையவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. பென்ஷன் விருப்பத்திற்கும், ஓய்வு கால திட்டமிடலுக்கும் பெரும் இடைவெளி இருப்பதை இந்த ஆய்வு உணர்த்துகிறது.ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர், 45 முதல் 55 வயதுக்கு முன் ஓய்வு பெற விரும்புவதாக தெரிவித்துள்ளனர். எனினும், வருங்கால வைப்பு நிதி, தேசிய பென்ஷன் திட்டம், பணிக்கொடை போன்ற பாரம்பரிய வழிகளையே ஓய்வு கால திட்டமிடலுக்காக நம்பியுள்ளனர்.ஆய்வில் பங்கேற்றவர்களில் 76 சதவீதத்திற்கு மேல், ஆண்டளிப்பு திட்டங்களில் முதலீடு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஓய்வுகால திட்டமிடல் தொடர்பான விழிப்புணர்வு மேலும் தேவை என ஆய்வு வலியுறுத்துகிறது.