மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு பொது வணிக குறியீடு பெற உதவி 3.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு
சென்னை: தமிழகத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் வாயிலாக, தேங்காய், முருங்கை, மஞ்சள், சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு, 3.62 கோடி ரூபாயில், பொது வணிகக் குறியீடு உருவாக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. நாட்டில் உணவு பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள குறுந்தொழில் நிறுவனங்கள், தரமான பொருட்கள் உற்பத்தி செய்யவும், அந்நிறுவனங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவும், பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப் படுத்தும் திட்டத்தை செயல்படுத்துகிறது. தமிழகத்தில், இத்திட்டத்தை தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் தொழில் வணிக ஆணையரகம் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தில் இயந்திரங்கள் வாங்க உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு, 35 சதவீதம் அதிகபட்சம், 10 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதேபோல், சுய உதவிக்குழு உள்ளிட்டோருக்கு தனித்தனி மானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு பொருட்களுக்கு பொதுவான வணிக குறியீடு உருவாக்க உதவும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக, 3.62 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இந்த நிதியை, மத்திய அரசும், மாநில அரசும் பகிர்ந்துகொள்ள உள்ளன. பொது வணிகக் குறியீடு பெற்ற பின், அந்த நிறுவனங்கள் தரமான முறையில் பொருட்களை உற்பத்தி செய்வதை, உழவர் உற்பத்தியாளர் குழுக்களும், அரசும் கண்காணிக்கும்.
என்ன பயன்?
ஒரு தயாரிப்புக்கு பொதுவான வணிகக் குறியீடு இருந்தால் தான், அதை சந்தைப்படுத்தி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விற்க உதவியாக இருக்கும். பிரதமரின் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில் கடன் பெற்று, தொழில் துவங்கிய நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்த, உழவர் உற்பத்தியாளர் குழு வாயிலாக பொதுவான வணிக குறியீடு உருவாக்கி தரப்படுகிறது. இதனால் குறு நிறுவனங்களும், உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் பயன் பெறும்.