உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரிசர்வ் பேங்க் புதிய கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா

ரிசர்வ் பேங்க் புதிய கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா

புதுடில்லி: ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக, மத்திய வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதையடுத்து, மத்திய அரசு புதிய கவர்னரை நியமித்துள்ளது.ரிசர்வ் வங்கியின் 26வது கவர்னராக பொறுப்பேற்க உள்ள சஞ்சய் மல்ஹோத்ரா, மூன்று ஆண்டு காலம் அப்பதவியில் இருப்பார்.ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், ஐ.ஐ.டி., கான்பூரில் கணினி அறிவியலில் இளநிலை பட்டமும்; அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கை பாடத்தில் முதுநிலை பட்டமும் பெற்றுள்ளார். நிதி, மின்சாரம், வருவாய் என, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 33 ஆண்டுகால பணி அனுபவம் மிக்கவர் சஞ்சய் மல்ஹோத்ரா.கடந்த 2018ம் ஆண்டு, ரிசர்வ் வங்கியின் கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார். 2021ல் பணி நீட்டிப்பு பெற்று பதவி வகித்த நிலையில், மீண்டும் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என்றும்; நாட்டின் மிக நீண்ட காலம் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தவர் என்ற சாதனை படைக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சஞ்சய் மல்ஹோத்ரா, ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.ரிசர்வ் வங்கியின் கவர்னராக நீண்ட காலம் இருந்தவர்களின் பட்டியலில், பெனகல் ராமா ராவ் முதலிடத்தில் உள்ளார்.இவர் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக கவர்னராக பணியாற்றியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, ஆறு ஆண்டு கால பணி அனுபவத்துடன், சக்திகாந்த தாஸ் இரண்டாம் இடத்தில் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை