உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி ரூ.60,000 கோடியை தாண்டியது

கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி ரூ.60,000 கோடியை தாண்டியது

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 60,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அமைச்சகத்தின் தரவுகளின்படி, மொத்த கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில், உறைநிலை இறாலின் பங்கே அதிகமாக உள்ளது.நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட கடல் உணவுப் பொருட்களில், மூன்றில் இரண்டு பங்கு உறைநிலை இறால் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் விதமாகவும், உலகளாவிய போட்டியை எதிர்கொள்ளும் விதமாகவும், இறால் மற்றும் மீன் தீவன உற்பத்திக்கான பல முக்கிய உள்ளீட்டு பொருட்கள் மீதான அடிப்படை சுங்க வரி, கடந்த பட்ஜெட்டில் 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.மேலும், சில உள்ளீட்டு பொருட்களுக்கு சுங்க வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டது.கடந்த நிதியாண்டைப் பொறுத்தவரை, இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட 60,500 கோடி ரூபாய்க்கு 17.80 லட்சம் டன் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவை, முந்தைய 2022 - 23ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 2.67 சதவீதம் அதிகமாகும்.கடந்த நிதியாண்டில் இந்தியாவிலிருந்து கடல் உணவுப் பொருட்களை அதிகளவு இறக்குமதி செய்த நாடுகள் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், 35 சதவீதம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில், உறைநிலை இறாலின் பங்கு 92 சதவீதம். இந்த பட்டியலில் சீனா இரண்டாம் இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ