எஸ்.இ.ஆர்.சி., கண்டுபிடித்த தொழில்நுட்பங்கள் பரிமாற்றம்
சென்னை:மத்திய அரசின் சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தின் கீழ் எஸ்.இ.ஆர்.சி., அதாவது, மத்திய கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது.இது, மின்சாரம் எடுத்து செல்லும் அதிக திறன் உடைய மின் கோபுரங்கள் சாய்ந்து விழும் போது, அவசர காலத்திற்கு பயன்படுத்தும், 'இ.ஆர்.எஸ்., - எமர்ஜென்சி ரீடிரைவல் சிஸ்டம்' எனும் கட்டமைப்பை கண்டுபிடித்துள்ளது. இதுதவிர, துப்பாக்கி குண்டுகள் துளைக்காமல் இருக்கும் வகையில், 'ஹை வெலோசிட்டி மல்டி ஹிட் ரெசிஸ்டன்ட் மூவபிள் பூத்' எனப்படும், செக்யூரிட்டி பூத்திற்கான தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நேற்று நடந்த நிழ்ச்சியில், கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம், இ.ஆர்.எஸ்., தொழில்நுட்பத்தை, கோல்கட்டாவை சேர்ந்த, 'ஹை டெக் சிஸ்டம்ஸ் அண்டு சர்வீசஸ்' நிறுவனத்திற்கு வழங்கியது. செக்யூரிட்டி பூத் தொழில்நுட்பம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள, 'ஹேமக்னி பில்ட் புரோ இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தங்களை, எஸ்.இ.ஆர்.சி., இயக்குனர் அனந்தவள்ளி மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பரிமாறி கொண்டனர்.