வெள்ளி விலை விரைவில் கிலோ 1.10 லட்சத்தை தொடும்
புதுடில்லி: சர்வதேச அளவில், தேவை மற்றும் முதலீடு அதிகரித்து வருவதால், இந்தியாவில், வெள்ளி விலை 1 கிலோ, 1.10 லட்சம் ரூபாயை விரைவில் தொடுமென நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை இந்தாண்டு 30 சதவீதம் வரை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளி விலை 35 சதவீதம் அதிகரித்து உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளி விலை, கடந்த வியாழன்று கிலோ 94,000 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் வெள்ளி விலை, 1 லட்சம் ரூபாயை ஏற்கனவே தாண்டி உள்ளது. அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை, சீனாவின் பணக்கொள்கை, தொழிற்துறை தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் வெள்ளி விலை, மேலும் புதிய உச்சங்களை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய காரணங்கள்
சீன பணக்கொள்கை:கொரோனா தொற்றுக்கு பின் பொருளாதார சரிவில் இருந்து மீள முயற்சித்து வரும் சீனா, வெள்ளி மீது முதலீட்டை அதிகரிக்க முடிவு செய்து உள்ளது. குறிப்பாக, சோலார் பேனல் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளதால் தொழிற்துறை தேவை மேலும் அதிகரிக்கும்.அமெரிக்க வட்டி குறைப்பு:அமெரிக்க பணவீக்கம் குறையும்பட்சத்தில், அந்நாட்டின் மத்திய வங்கியான 'பெடரல் ரிசர்வ்' வட்டி குறைப்பை தொடரும் என எதிர்ப்பார்ப்பதால், வெள்ளி மீதான முதலீடு அதிகரித்து, விலை மேலும் உயரக்கூடும்.மின்சார வாகனங்கள்:மின்சார சாதனங்கள், பேட்டரி மற்றும் சார்ஜிங் கட்டமைப்புகளில் வெள்ளி பயன்படுத்தப்படுவதால், வெள்ளி விலை உயர காரணமாக உள்ளது.சோலார் பேனல்:புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முக்கிய பங்கு வகிக்கும் சோலார் பேனல்கள் தயாரிப்பில், வெள்ளி முக்கிய மூலப்பொருளாக விளங்குகிறது. பண்டிகைக்கால தேவை:பண்டிகை காலத்தை முன்னிட்டு நகைகள், பரிசுப் பொருட்களாக வெள்ளி விற்பனை அதிகரிக்கும்.தொழில்நுட்ப பார்வை:வெள்ளி விலை, 1 கிலோ 95,000 ரூபாயை தாண்டும் போது, மேலும் விலை உயர்ந்து குறுகிய காலத்தில் 1 லட்சம் முதல் 1.10 லட்சம் ரூபாயை தொடும் என, தொழில்நுட்ப பார்வையில் மதிப்பிடப்பட்டு உள்ளது.