வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இங்கேயும் சீக்கிரம். பிரதான் மந்திரிக்கீ ஏ.ஐ யோஜனான்னு கொண்டாந்துருவாங்க.
இந்த ஏஐ தொழில் நுட்பத்தால் உங்களின் உணவினை தயாரிக்க முடியுமா
வாஷிங்டன்;அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற உடனே, உலக தொழில்நுட்ப துறையினரை திரும்பி பார்க்க வைக்கும் வகையில், ஸ்டார்கேட் ஏ.ஐ., எனும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், அமெரிக்காவை முன்னிலைப்படுத்தும் நோக்கில் இத்திட்டத்தை அவர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மதிப்பு 500 பில்லியன் டாலர். அதாவது 42.50 லட்சம் கோடி ரூபாய்.இத்திட்டத்தில் இவருடன் மூன்று நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த ஓபன் ஏ.ஐ., ஆரக்கிள் எனும் இரண்டு நிறுவனங்கள் மற்றும் ஜப்பானின் சாப்ட்பேங்க் ஆகியவை தான் அவை. முதல்கட்டமாக, 8.50 லட்சம் கோடி ரூபாயை ஓபன் ஏ.ஐ., முதலீடு செய்யும் என்றும்; அமெரிக்காவின் எதிர்கால தொழில்நுட்பத்தை ஸ்டார்கேட் ஏ.ஐ., தீர்மானிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்கேட் என்பது என்ன?
ஓபன் ஏ.ஐ., ஆரக்கிள், சாப்ட்பேங்க் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்த கூட்டு நிறுவனம் தான் இது. இதன் நிதித் தேவைக்கான பொறுப்பை சாப்ட்பேங்க் ஏற்கும். இயக்கம், ஆராய்ச்சியை ஓபன் ஏ.ஐ., நிர்வகிக்கும். தொழில்நுட்ப ஆதரவை ஆரக்கிள் வழங்கும்.எங்கு செயல்படும்?
ஏற்கனவே நிறைய தரவு மையங்கள் செயல்படும் டெக்சாசில், ஸ்டார்கேட் தன் பணியை துவங்கும். முதல்கட்டமாக 10 தரவு மையங்கள் புதிதாக அமைக்கப்படும். படிப்படியாக 20 ஆக அவை அதிகரிக்கப்படும். ஒவ்வொரு மையமும் 5 லட்சம் சதுர அடியில் அமையும். மற்ற பகுதிகளில் தரவு மையங்களை அமைக்கவும் பரிசீலிக்கப்படும்.என்ன நோக்கம்?
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மருத்துவ மறுமலர்ச்சிக்கு பயன்படுத்துவதே தலையாய நோக்கம். சாதாரண ரத்தப் பரிசோதனை வாயிலாக புற்றுநோயை கண்டறிதல், மரபணு தொடரை அறிந்து, கட்டியின் மரபணுவை உடைக்க தடுப்பூசி அளிப்பது, ரோபோ தொழில்நுட்பத்தில் 48 மணி நேரத்தில் புற்றுநோய் சிகிச்சை என நீள்கிறது பட்டியல்.வேறு பயன்கள்?
ஸ்டார்கேட் ஏ.ஐ., தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், அமெரிக்கர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும், பல்வேறு தொழில்நுட்ப பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும் என, சாப்ட்பேங்க் தலைமை செயல் அதிகாரி மசாயோஷி சன் தெரிவித்தார். இதே கருத்தை, ஓபன் ஏ.ஐ., நிறுவனத் தலைவர் ஆல்ட்மேன், ஆரக்கிள் நிறுவனர் லேரி எலிசன் ஆகியோரும் வழிமொழிந்துள்ளனர்.எவ்வளவு வேலைவாய்ப்பு?
ஸ்டார்கேட் ஏ.ஐ., வாயிலாக, ஒரு லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைக்கும் என, டிரம்ப் அறிவித்துள்ளார். தரவு மையங்களைச் சுற்றி வசிப்பவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கும் என்றார் அவர். கட்டுமானம், இயக்கம் மற்றும் ஆய்வு, தகவல் சேகரிப்பு, தரவு பராமரிப்பு என எண்ணற்ற பிரிவுகளில் வேலை கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பு.டிரம்ப் ஆர்வம்
ஏ.ஐ., தொழில்நுட்ப திட்டங்களில் அதிபர் டிரம்ப், முன் எப்போதும் இல்லாத அளவு ஆர்வம் காட்டுகிறார். அமெரிக்காவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மையமாக மாற்ற அவர் சூளுரைத்திருக்கிறார். வேகமாக வளரும் தொழில்நுட்பத்தில், கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளை முந்தைய பைடன் அரசு பயன்படுத்தத் தவறியதாக அவர் கருதுகிறார். சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் போட்டியிடும் நிலையில், அமெரிக்காவை முதன்மைப்படுத்த டிரம்ப் திட்டமிடுகிறார்.எதிர்ப்புக்கும் பஞ்சமில்லை
ஸ்டார்கேட் ஏ.ஐ., அமைப்பதற்கு, டிரம்ப்பின் நெருங்கிய நண்பரும், பெருந்தொழிலதிபருமான எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்தக் கூட்டு வணிகத்தில் ஓபன் ஏ.ஐ., இணைக்கப்பட்டதில் அவருக்கு விருப்பமில்லை. ஓபன் ஏ.ஐ.,யின் சாம் ஆல்ட்மேனுடன் எலான் மஸ்க் மோதல் போக்கு கொண்டவர் என்பது முக்கிய காரணம். இவ்வளவு பெரிய திட்டத்தை செயல்படுத்த, அந்த மூன்று நிறுவனங்களிடம் பணம் இல்லை என பதிவிட்டார் மஸ்க். ஆனால், செயல்படுத்திக் காட்டுவோம் என பதிலளித்தார், ஆல்ட்மேன்.
ஸ்டார்கேட் திட்டத்தால், இந்தியாவுக்கு பலமான போட்டியும் சவாலும்தானே தவிர, நேரடி பயன் ஏதுமில்லை. ஓபன் ஏ.ஐ., ஆரக்கிள், சாப்ட்பேங்க் கூட்டு மட்டுமின்றி என்விடியா, மைக்ரோசாப்ட், ஆர்ம் ஆகிய முன்னணி நிறுவனங்களும் ஸ்டார்கேட் திட்டத்தில் பங்களிக்க உள்ளன. இவை, ஏ.ஐ., தொழில்நுட்ப வளர்ச்சியில் அமெரிக்காவை விரைவுபடுத்தும் என்பதால், அவற்றுடன் போட்டியிடும் சவாலை இந்தியாவுக்கு ஏற்படுத்தும்.அதேநேரம், ஏற்கனவே ஏ.ஐ., தொழில்நுட்ப பயன்களை அதிகம் பயன்படுத்த முயற்சிக்கும் இந்தியா, அதன் இலக்குகளை மேலும் விரிவாக்க, அமெரிக்காவின் ஸ்டார்கேட் திட்டம் துாண்டுதலாக அமையும் என்கிறார், அட்வான்டேஜ் கிளப். ஏ.ஐ., நிறுவன இணை நிறுவனர் ஸ்மிதி பாட் தியோரா.ஸ்டார்கேட் ஏ.ஐ., திட்டத்துக்கு திறமையான பணியாளர்கள் எங்கிருந்து கிடைப்பர்? அதிகம் பேர் இந்தியர்களாகவே இருப்பர் என்பதால், வேலைவாய்ப்பு கிடைக்கும். அதோடு, 10,000 கோடி ரூபாயில் ஏ.ஐ., வளர்ச்சி திட்டத்தை நாம் அமல்படுத்தினாலே போதும் என்கிறார், ஏ.ஐ., அண்டு பியாண்டு நிறுவன இணை நிறுவனர் ஜஸ்பிரீத் பிந்த்ரா.
இங்கேயும் சீக்கிரம். பிரதான் மந்திரிக்கீ ஏ.ஐ யோஜனான்னு கொண்டாந்துருவாங்க.
இந்த ஏஐ தொழில் நுட்பத்தால் உங்களின் உணவினை தயாரிக்க முடியுமா