தொழில் துவங்க கொரிய நிறுவனத்துடன் பேச்சு
சென்னை:தமிழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கத்தில் 379 ஏக்கரிலும்; திருவள்ளூர் மாநல்லுாரில் 2,400 ஏக்கரிலும் தொழில் பூங்காக்களை, 'சிப்காட்' எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனம் அமைத்து வருகிறது.இந்தியாவில் முதலீடுகளை அதிகரிப்பதற்காக, தென் கொரிய நாட்டைச் சேர்ந்த, 'டிவி, பிரிஜ்' உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், தமிழகத்தில் தொழில் துவங்க, அதன் அதிகாரி களுடன் தமிழக அரசு சார்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில், அந்நிறுவனத்தின் தலைவர், இம்மாத இறுதியில் இந்தியா வர உள்ளார். அவரை சந்தித்து, அந்நிறுவனத்தின் முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் தொழில் துறை அதிகாரிகள் ஈடுபட்டுஉள்ளனர்.ஏற்கனவே, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகில், தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. அங்கு, வாஷிங் மிஷின் உட்பட பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உற்பத்தி செய்யப்படுகினறன.