உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மாம்பழ கூழ் ஆலைகள் அமைக்க தமிழக அரசு சிறப்பு சலுகை

மாம்பழ கூழ் ஆலைகள் அமைக்க தமிழக அரசு சிறப்பு சலுகை

சென்னை:தமிழகத்தில் இருந்து மாம்பழம் ஏற்றுமதியை அதிகரிக்கவும், மாம்பழக்கூழ் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆலை அமைப்பதை ஊக்குவிக்கவும் சலுகைகளை வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.கர்நாடகா, ஆந்திராவில் மாம்பழத்தில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் அதிகம் உள்ள நிலையில், தமிழகத்தில் அவை குறைவாக உள்ளன. தமிழகத்தில் இந்தாண்டு மாம்பழம் கொள்முதல் விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியால், மா விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.எனவே, வரும் சீசனில் இந்த பிரச்னை ஏற்படாமல் இருக்க, தமிழகத்தில் இருந்து மாம்பழம் ஏற்றுமதியை அதிகரிக்கவும், மாம்பழக்கூழ் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சலுகைகளை வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்திய மாம்பழம் வகைகளுக்கு, ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து முக்கிய சந்தைகளாக உள்ளன. இந்தியாவில் இருந்து மாம்பழம் ஏற்றுமதி செய்வதில், தமிழகத்தின் பங்கு குறைவாக உள்ளது. மாம்பழம் ஏற்றுமதிக்கு, சர்வதேச தரத்தில் நல்ல பேக்கேஜிங் அவசியம்.எனவே, தமிழகத்தில் பேக்கேஜிங் வசதி, குளிர்பதன கிடங்குகள், தரச்சோதனை ஆய்வகம் போன்றவை அமைக்க பெறப்படும் கடனுக்கு 30 - 40 சதவீதம் மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மாம்பழக்கூழ் தயாரிக்கும் ஆலை அமைக்கவும் மானியம் வழங்கப்படும்.வெளிநாடுகளில் விவசாயிகள், தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் வாங்குவோர், விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படும். மாம்பழம் ஏற்றுமதி ஊக்குவிப்பு சலுகைகள் குறித்த அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !