உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மின் கட்டணம் உயர்ந்தால் கூடுதல் செலவை ஏற்க தமிழக அரசுக்கு டான்ஸ்டியா வலியுறுத்தல்

மின் கட்டணம் உயர்ந்தால் கூடுதல் செலவை ஏற்க தமிழக அரசுக்கு டான்ஸ்டியா வலியுறுத்தல்

சென்னை:'கடந்த மூன்று ஆண்டுகளாக மின் கட்டண உயர்வால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சிரமப்படுகின்றன. இந்நிலையில், அடுத்த மாதம் முதல் மின் கட்டணத்தை மேலும் உயர்த்தினால், அந்த செலவை அரசே ஏற்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, 'டான்ஸ்டியா' கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது. 2022ல், மின் கட்டண உயர்வு தொடர்பான ஆணை வெளியிட்டபோது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அடுத்த மாதம் முதல் மின் கட்டணத்தை, 3.16 சதவீதம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, 'வீடுகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. இலவச மின்சாரம் தொடரும்' என, மின் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். மற்ற பிரிவுகளுக்கான கட்டண உயர்வு குறித்து, எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், அடுத்த மாதம் மின் கட்டணம் உயர்த்தினால், எம்.எஸ்.எம்.இ., பிரிவுக்கான செலவை, அரசு ஏற்க கோரிக்கை வலுத்துள்ளது.இதுகுறித்து, 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் மோகன், செயலர் வாசுதேவன் கூறியதாவது:கடந்த மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மிகவும் சிரமமான நிலையில் உள்ளன. மின்சார நிலை கட்டண உயர்வை குறைக்க தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்படுகிறது. இருப்பினும், அந்த கட்டணம் குறைக்கப்படவில்லை. இந்த சூழலில், அடுத்த மாதம் முதல் மின் கட்டண உயர்வை சிறு, குறு தொழில்களுக்கு அமல்படுத்தாமல் இருக்க, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டணத்தை உயர்த்தினால், சிறு, குறு தொழில்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவை, அரசே ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை