ஏற்றுமதியாளர்களுக்கு தற்காலிக நிம்மதி
புதுடில்லி:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது, இந்திய ஏற்றுமதியாளர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.இந்த முடிவு, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சு நடத்துவதற்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கடந்த வாரம், உலக நாடுகளின் மீது பரஸ்பர வரி விதிப்பை அறிவித்திருந்த டிரம்ப், இது இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.முதற்கட்டமாக கடந்த 6ம் தேதி முதல், அனைத்து நாடுகளின் மீதும் 10 சதவீத அடிப்படை வரி விதிக்கப்படும் என்றும்; இதன் பிறகு 9ம் தேதி முதல் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்றும் அறிவித்திருந்தார். நேற்று முன்தினம், முதல் பரஸ்பர வரி விதிப்பு முழுமையாக செயல்பாட்டுக்கு வரவிருந்த நிலையில், சீனா தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளின் மீதான பரஸ்பர வரி விதிப்பையும் அடுத்த 90 நாட்களுக்கு நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார். இந்த காலகட்டத்தில் மற்ற நாடுகளின் இறக்குமதிகள் மீது 10 சதவீத அடிப்படை வரி மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.டிரம்பின் இந்த அறிவிப்பு, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.இந்த முடிவை வரவேற்றுள்ள அவர்கள், பொருளாதார பாதிப்பை தவிர்க்கவும், வர்த்தக ரீதியான பேச்சுகளை நடத்தவும் இது உதவும் என தெரிவித்துள்ளனர்.மேலும், சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், இந்தியாவுக்கும் அமெரிக்காவும் இடையேயான இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் விரைவாக இறுதி செய்யப்படும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.