அரிசி அடிப்படை விலை ஒரு குவின்டால் ரூ.2,250
புதுடில்லி:வெளிச்சந்தையில் 2024-25ம் ஆண்டுக்கான அரிசி விற்பனை திட்டத்தின் கொள்கையை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்திய உணவுக் கழகத்துக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அரிசி கொள்கையில், ஒரு குவின்டால் அரிசிக்கு, அடிப்படை விற்பனை விலையாக 2,250 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள், மாநில அரசு உணவுக் கழகங்கள், சமுதாய சமையலறைகள் ஆகியவை, இணையதள ஏலத்தில் பங்கேற்காமல், இதன் வாயிலாக அரிசி வினியோகிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுதும் எத்தனால் உற்பத்திக்கும் இதே விலையில் அரிசி வினியோகிக்கலாம் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் அரிசி வினியோக திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த முடிவு அமைந்துள்ளதாக, மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.