உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஏற்றுமதி நகைகளுக்கான சேதாரம் மாற்றியமைத்தது மத்திய அரசு

ஏற்றுமதி நகைகளுக்கான சேதாரம் மாற்றியமைத்தது மத்திய அரசு

புதுடில்லி:இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகளுக்கான சேதாரத்தை, மத்திய அரசு மாற்றியமைத்து உள்ளது. வரும் ஜன.,1 முதல் புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் வெளியிட்ட பொது அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:ஏற்றுமதி செய்யப்படும் நகைகளுக்கான அனுமதிக்கப்படும் சேதாரம் மற்றும் உள்ளீட்டு --- வெளியீடு தரப்படுத்தல் விதிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, கைகளால் தயாரிக்கப்படும் தங்கம் மற்றும் பிளாட்டின நகைகளுக்கான சேதாரம் 2.5 சதவீதத்தில் இருந்து 2.25 சதவீதமாக குறைக்கப்படுகிறது. வெள்ளி நகைக்கான சேதாரம் 3.2 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அதுவே, இயந்திரத்தில் தயாரிக்கப்படும் தங்கம் மற்றும் பிளாட்டினம் நகைகளுக்கான சேதாரம் 0.45 சதவீதமாகவும், வெள்ளி நகைக்கான சேதாரம் 0.50 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது. மேலும், கைகளால் தயாரிக்கப்படும் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் அணிகலன்களுக்கு 4 சதவீதம் வரை சேதாரம் அனுமதிக்கப்படும். இதுவே, இயந்திரத்தில் தயாரிக்கப்படும் அணிகலன்களுக்கு சேதாரம் 2.8 சதவீதம் வரை அனுமதிக்கப்படும். நகைகள் தவிர, தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தால் தயாரிக்கப்படும் சிலைகள், நாணயங்கள் மற்றும் பதக்கங்கள் பிற பொருட்களுக்கு இந்த விதிகள் பொருந்தும். வரியில்லா சலுகையைப் பயன்படுத்தி, உள்நாட்டு சந்தையில் நகைகள் குவிவதை கட்டுப்படுத்தும் விதமாக, உள்நாட்டு நகை உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்று, இந்த விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. புதிய விதிகள், 2025, ஜன.,1 முதல் அமலுக்கு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ