நாட்டின் ஆட்டோமொபைல் ஏற்றுமதி கடந்தாண்டில் 19 சதவீதம் அதிகரிப்பு
புதுடில்லி:வளர்ந்து வரும் சந்தைகளின் தேவை காரணமாக கடந்த 2024ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து ஆட்டோமொபைல் ஏற்றுமதி முந்தைய ஆண்டைக் காட்டிலும் 19 சதவீதம் அதிகரித்துள்ளதாக 'ஷியாம்' தரவுகள் தெரிவிக்கின்றன. ஷியாம் எனப்படும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்கா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளின் தேவையால் இந்திய ஆட்டோமொபைல் சந்தை மறுமலச்சி கண்டது. இதன்படி, கடந்த 2024 காலண்டர் ஆண்டின் மொத்த ஏற்றுமதி எண்ணிக்கை 50.99 லட்சமாக உயர்ந்தது. இது முந்தைய ஆண்டான 2023ல் ஏற்றுமதி செய்யப்பட்ட 42.86 லட்சத்திலிருந்து 19 சதவீதம் அதிகமாகும்.கடந்த 2023ல் 6.77 லட்சமாக இருந்த பயணியர் வாகன ஏற்றுமதி, 2024ல் 10 சதவீதம் அதிகரித்து 7.44 லட்சமாக இருந்தது. பயன்பாட்டு வாகன ஏற்றுமதி முந்தைய ஆண்டை காட்டிலும் 33 சதவீதம் அதிகரித்து 3.24 லட்சமாகவும், வேன் ஏற்றுமதி, 14 சதவீதம் அதிகரித்து 8,207 ஆகவும் இருந்தது. இருப்பினும், பயணியர் கார் ஏற்றுமதி கடந்தாண்டைக் காட்டிலும் 4 சதவீதம் குறைந்து 4.12 லட்சமாக இருந்தது. இது முந்தைய ஆண்டில் 4.28 லட்சமாக இருந்தது. வணிக வாகன ஏற்றுமதி, 68,473ல் இருந்து 6 சதவீதம் வளர்ச்சி கண்டு 72,511 ஆக அதிகரித்திருந்தது. மூன்று சக்கர வாகனங்களும் முந்தைய ஆண்டின் 2.92 லட்சத்தில் இருந்து 2 சதவீதம் உயர்வு கண்டு 2.98 லட்சமாக இருந்தது. இருசக்கர வாகன ஏற்றுமதியைப் பொறுத்தவரையில், 32.44 லட்சத்தில் இருந்து 23 சதவீதம் அதிகரித்து கடந்தாண்டு 39.77 லட்சமாக அதிகரித்து இருந்தது. இதற்கு மோட்டார் சைக்கிள்களின் ஏற்றுமதி 24 சதவீதம் அதிகரித்தது முக்கிய காரணமாகும். மேலும், ஸ்கூட்டர் ஏற்றுமதியும் கடந்தாண்டில் 5.73 லட்சமாக அதிகரித்திருந்தது. இது 2023ல் 4.91 லட்சமாக இருந்தது. மொபெட் ஏற்றுமதி 89 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து 6,346 ஆக இருந்தது.