எண்கள் சொல்லும் செய்தி
1.75 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது, நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்கள் வரையிலான நாட்டின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி. இது கடந்த நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 54 சதவீதம் அதிகமாகும். மொத்த ஏற்றுமதியில் ஆப்பிள் நிறுவன ஏற்றுமதியாளர்களின் பங்கு 70 சதவீதமாக உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தின் பங்கு மட்டுமே கிட்டத்தட்ட 50 சதவீதமாக இருந்தது. 55 லட்சம் ரூபாயை சைபர் தாக்குதலால் இழந்துள்ளது பொதுத்துறை நிறுவனமான, எச்.ஏ.எல்., எனும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ். மூன்று போர் விமான பாகங்கள் வாங்குவதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த 'பி.எஸ்., இன்ஜினியரிங்' எனும் நிறுவனத்துடன் மின்னஞ்சல் வாயிலாக தகவல் பரிமாற்றம் நடந்துள்ளது. இதே மின்னஞ்சல் முகவரியில் ஒரு எழுத்தை மட்டும் மாற்றி போலி மின்னஞ்சல் வந்துள்ளது. இது பற்றி அறியாத எச்.ஏ.எல்., நிறுவனம், போலி மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட வங்கி கணக்குக்கு 55 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளது. தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. 17,400 கோடி ரூபாய் மதிப்பிலான, இந்தியாவில் உள்ள நீர் மற்றும் சூரியசக்தி மின்சார சொத்துகளை விற்க, நார்வே அரசு நிறுவனமான 'ஸ்டேட்கிராப்ட்' திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் போட்டித்தன்மையை மேம்படுத்தும் விதமாக, குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே முதலீடுகளை கொண்டிருக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழகம், ராஜஸ்தான், ஹிமாச்சல் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் உள்ள மின்சார திட்டங்கள் விற்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.