கிரெடிட் கார்டை ரத்து செய்ய சரியான வழிகள்!
நிதி சூழலுக்கு ஏற்ப கிரெடிட் கார்டை ரத்து செய்வது ஏற்ற முடிவாக அமைந்தாலும், அதை சரியாக திட்டமிட்டு மேற்கொள்வது அவசியம்.கிரெடிட் கார்டு பயன்பாட்டில் எப்போதுமே கவனம் தேவை. சரியான முறையில் கையாளும் போது, கார்டு பயன்பாட்டின் சாதகமான பலன்களை பெறலாம். அதே நேரத்தில் கட்டுப்பாடில்லாத பயன்பாடு, பல்வேறு இடர்களையும், இன்னல்களையும் கொண்டு வரும். சில நேரங்களில் கிரெடிட் கார்டை ரத்து செய்வது ஏற்றது என தோன்றலாம். அதிலும் குறிப்பாக ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகளை கொண்டிருக்கும் போது, கடன் சுமை அச்சம் இருந்தால், தேவையில்லாத ஒரு கார்டை ரத்து செய்வது அவசியம் ஆகலாம். கிரெடிட் ஸ்கோர்
நன்றாக அலசி ஆராய்ந்து கார்டை ரத்து செய்வது என தீர்மானித்த பின், அதை சரியாக மேற்கொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில், இந்த செயல்முறை கிரெடிட் ஸ்கோர், கடன் வரலாறு உள்ளிட்டவற்றை பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அதற்கேற்ப கவனமாக செயல்பட வேண்டும். கார்டை ரத்து செய்ய தீர்மானிப்பது சிக்கலானது என்றாலும், பொதுவாக தங்கள் நிதி இலக்கிற்கு ஏற்றதாக அமையவில்லை என நினைத்தால் அல்லது அதிகம் செலவிட வைக்கிறது என உணர்ந்தால், கார்டை ரத்து செய்யலாம். கார்டுக்கு செலுத்த வேண்டிய ஆண்டு கட்டணம் போன்றவை அதிக சுமையாக மாறினாலும், ரத்து செய்யும் முடிவுக்கு வரலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகள் இருக்கும் போது, பொருத்தமில்லாத கார்டை திரும்ப அளிக்க தீர்மானிக்கலாம். நிதி சூழலுக்கு ஏற்ப எடுக்க வேண்டிய முடிவு இது. எதிர்பாராத திடீர் நெருக்கடிகளாலும் கார்டை ரத்து செய்ய வேண்டிய நிலை வரலாம். இந்த முடிவு, கிரெடிட் ஸ்கோரை பாதிக்காமல் இருக்கும் வகையில் செயல்பட வேண்டும். திட்டமிடல்
கிரெடிட் கார்டை திரும்ப அளிப்பது, கடன் பயன்பாடு வரம்பை பாதிக்கும் என்பதால் கிரெடிட் ஸ்கோர் மீதும் தாக்கம் செலுத்தும்; கடன் வரலாற்றையும் பாதிக்கும். எனவே, கார்டை ரத்து செய்யும் முன், நிலுவையில் உள்ள தொகைகள் அனைத்தையும் செலுத்திவிட வேண்டும். இது தொடர்புடைய வட்டி மற்றும் அபராதம் ஆகியவற்றையும் தவிர்க்க உதவும். வரம்புகள் அல்லது மீதி தொகை இருந்தால், கைவசம் உள்ள கார்டிற்கு மாற்றிக் கொள்ளலாம். கார்டு பயன்பாடு விகிதத்தை மேம்படுத்திக் கொள்ளவும் இது உதவும். எஞ்சிய பரிசுப்புள்ளிகள் இருந்தால் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனினும், ஒரே நேரத்தில் பல கிரெடிட் கார்டுகளை ரத்து செய்யக்கூடாது. ஒவ்வொரு கார்டாகவே முடிவு செய்ய வேண்டும். மேலும், அதிக காலம் பயன்பாட்டில் உள்ள கார்டை தக்க வைத்துக்கொள்வது நல்லது. ரத்து செய்த பின், கிரெடிட் அறிக்கை மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். கார்டை ரத்து செய்தது சரியான முறையில் பதிவாகி இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏதேனும் பிழைகள் இருந்தால், அவற்றை திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்டை ரத்து செய்வது தொடர்பான செயல்முறைகளையும் முறையாக மேற்கொள்ள வேண்டும். இந்த அம்சங்களை கவனத்தில் கொண்டு செயல்படுவதன் மூலம், கார்டை ரத்து செய்வது கிரெடிட் ஸ்கோரை பாதிப்பதை குறைக்கலாம்.