உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வரலாறு காணாத சரிவில் இந்திய ரூபாயின் மதிப்பு

வரலாறு காணாத சரிவில் இந்திய ரூபாயின் மதிப்பு

புதுடில்லி:அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்றைய வர்த்தக நேரத்தின் இடையே, 1 பைசா குறைந்து, வரலாறு காணாத வகையில், 84.92 ரூபாயாக சரிவை கண்டது.அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு, கடந்த ஓராண்டில் மட்டும், 2.02 சதவீதம் இறக்கம் கண்டு உள்ளது.தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், உள்நாட்டு பங்குச் சந்தையில் நிலவும் சுணக்கம், அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றியை தொடர்ந்து, டாலரின் மதிப்பு வலுப்பெற்று வருவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ரூபாயின் மதிப்பு நெருக்கடியை தொடர்ந்து சந்தித்து வருகிறது. இந்நிலையில், பண்டிகை காலத்தை ஒட்டி, தங்கம் இறக்குமதி அதிகரித்ததால், நாட்டின் சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை, கடந்த அக்டோபரில் 2.28 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், கடந்த நவம்பரில் 3.18 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், கடந்த நவம்பரில், வர்த்தகப் பற்றாக்குறையும் 1.79 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. சரக்கு ஏற்றுமதியைப் பொறுத்தவரை, முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், கடந்த நவம்பரில் 4.90 சதவீதம் சரிவைக் கண்டு, 25 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்து, 2.70 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரம், சரக்கு இறக்குமதி, 27.04 சதவீதம் அதிகரித்து, 5.88 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.பட்ஜெட்டில், தங்கம் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்ததை தொடர்ந்து, தேவை அதிகரித்தது. இதனால், முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், கடந்த நவம்பரில், தங்கம் இறக்குமதி 50 சதவீதம் உயர்ந்து, 4.13 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.ரூபாய் மதிப்பு, மேலும் சரிவடையாமல் இருக்க, ரிசர்வ் வங்கி அன்னிய செலாவணி கையிருப்பு என்னும் ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டும்.மேலும், உள்நாட்டு பங்குச் சந்தையில் அன்னிய முதலீடுகள் மீண்டும் குவியத் துவங்கினால் மட்டுமே, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கட்டுக்குள் வரும் என, சந்தை நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

SIVA
டிச 24, 2024 09:36

உங்கள் அருகில் உள்ளவர்களிடம், குறிப்பாக அது இந்தியா உற்பத்தி செய்யும் பொருள் தானா என்று தெரிந்து வாங்க வேண்டும், பெரும்பாலும் ஆன்லைன் பொருள் வாங்கும் போது கவனித்து வாங்க வேண்டும் அவை அந்நிய நாடு கம்பெனிகளாக உள்ளன நீங்கள் விலை குறைவு என்று மட்டும் பார்த்தால் நம் நாட்டு பணம் நமக்கு தெரியாமல் அந்நிய செலாவணி என்ற பெயரில் நம் நாட்டு பணத்தின் சரிய செய்யும், மிக பெரிய பொருள் அங்கும் போது பெரிய அளவில் இந்தியா கம்பெனிகள் சில உள்ளன அந்த கம்பெனி பொருள்களை வாங்க வேண்டும், உள்ளூர் சரக்குகளை குடிப்பதால் தான் டாஸ்மாக் தமிழகம் வளர்ச்சி அடைந்த மாநிலமாக இந்தியாவிற்கெய் உலகத்திற்கேய் முன் மாதிரி மாடலாக உள்ளது ...


புதிய வீடியோ