திருப்பூர்:தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான பின், வர்த்தக விசாரணை அதிகரித்து, பிரிட்டனின் குளிர்கால ஆர்டர் வரத்தும் அதிகரித்துள்ளதாக, திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துஉள்ளனர்.
கடந்த, எட்டு ஆண்டுகால பேச்சுவார்த்தைக்கு பின், பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன் எதிரொலியாக, 27 நாடுகளை கொண்ட, ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சும் வேகமெடுத்து உள்ளது. பிரிட்டன் ஒப்பந்தம், வரும் டிச., மாதம் முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளது. அடுத்த சில மாதங்களுக்கு பின், தடையின்றி ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகம் செய்யும் வாய்ப்பு உருவாகப் போகிறது.
அத்தகைய நம்பிக்கையில், பிரிட்டன் வர்த்தகர்கள், இந்தியாவுக்கு வந்து, வர்த்தக விசாரணையை துவக்கினர். குறிப்பாக, நீடித்த நிலையான பசுமை சார் உற்பத்தி தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் திருப்பூர் உடனான வர்த்தக விசாரணையும், வழக்கத்தைவிட, 20 சதவீதம் அதிகரித்துள்ளது. வர்த்தக விசாரணைக்காக வந்தவர்கள், குளிர்கால ஆர்டர்களை ஒப்பந்தம் செய்யவும் துவங்கி விட்டனர். கடந்தாண்டு நிலவரப்படி, பிரிட்டனுக்கான மொத்த பின்னலாடை ஏற்றுமதி, 5,583 கோடி ரூபாய். இந்தாண்டு, 50 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துஉள்ளனர். திருப்பூரில் வர்த்தக விசாரணை வழக்கத்தைவிட, 20 சதவீதம் அதிகரிப்பு கடந்த ஆண்டில் பிரிட்டனுக்கு பின்னலாடை ஏற்றுமதி, 5,583 கோடி ரூபாய் இந்தாண்டு, 50 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்.
வங்கதேச வர்த்தகர்களும் வருகை
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க செயற்கை நுாலிழை ஆடை கமிட்டியின் துணை தலைவர் சுனில்குமார் கூறுகையில், ''ஒப்பந்தம் கையெழுத்தான வாரத்தில் இருந்தே, பிரிட்டனின் முன்னணி வர்த்தகர்கள், இந்தியாவிடம் வர்த்தக விசாரணையை துவக்கி விட்டனர். புதிய வர்த்தகர்கள், திருப்பூரின் உற்பத்தி படிநிலைகளை அறிந்துகொள்ளும் வகையில், குளிர்கால ஆர்டர்களை வழங்கியுள்ளனர். ''வங்கதேசத்துடன் வர்த்தகம் செய்து வரும் வர்த்தகர்களும், இந்தியா வந்து விசாரித்தனர். அதன்படி, வழக்கமான பிரிட்டன் ஆர்டர்களை காட்டிலும், கூடுதலான ஆர்டர் திருப்பூருக்கு வந்து கொண்டிருக்கின்றன,'' என்றார்.