உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்

ஒசாமு சுசூகி காலமானார்

இந்தியாவில், 'மாருதி 800' காரை அறிமுகப்படுத்தி, கார் சந்தையை விரிவுபடுத்தியதில் முக்கிய பங்காற்றிய சுசூகி நிறுவன முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி காலமானார். அவருக்கு வயது, 94. அவர், கடந்த 25ம் தேதி காலமானதாக, அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ஜப்பானின் பிரபல கார் நிறுவனங்களில் ஒன்றான சுசூகியின் தலைவராக 28 ஆண்டு காலம் ஒசாமு பதவி வகித்தார். சர்வதேச வாகன நிறுவனம் ஒன்றின் தலைவராக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற பெருமை பெற்றவர். கடந்த 1979ம் ஆண்டு, ஆல்டோ என்ற சிறிய காரை அறிமுகப்படுத்தியவர். குறைந்த விலையிலான கார்களை தயாரித்து ஜப்பானில் பிரபலமடைந்த சுசூகி நிறுவனத்தை, மற்றொரு நாட்டிலும் 'நம்பர் ஒன்' கார் நிறுவனமாக நிலைநிறுத்த விரும்பிய ஒசாமு, அதற்கு இந்தியாவை தேர்வு செய்தார். இது நடந்து, 40 ஆண்டுகளுக்கு பிறகு, இன்றளவும் இந்திய கார் சந்தையில் 40 சதவீத பங்குடன் மாருதி சுசூகி முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

செலவழிப்பு இடைவெளி குறைந்தது

நாட்டின் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் இடையே நிலவி வந்த நுகர்வு சமநிலையற்ற தன்மை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நடப்பாண்டு ஜூலை வரையிலான ஓராண்டில், குறைந்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மத்திய புள்ளிவிபரத் துறை ஆய்வின்படி, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023-24ம் நிதியாண்டில், நுகர்வு சமநிலையற்ற தன்மையின் இடைவெளி குறைந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. தனிநபர் மாதாந்திர செலவழிப்பில், கிராமம், நகரம் இடையேயான இடைவெளி 2011-12ல் 84 சதவீதமாக இருந்த நிலையில், 2023-24ல், இந்த இடைவெளி 71 சதவீதமாக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனிநபர் மாத செலவழிப்பு, 2022 - 23ல் கிராமப்புறத்தில் 3,773 ரூபாயாகவும்; நகர்ப்புறங்களில் 6,459 ரூபாயாகவும் இருந்தது. அதுவே, 2023-24ல் 4,122 மற்றும் 6,996 ரூபாயாக, இடைவெளி குறைந்தது தெரிய வந்துள்ளது.

திவால் நடவடிக்கைக்கு அனுமதி

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்துக்கு எதிராக, திவால் நடைமுறைகளை துவங்க, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 3.69 கோடி ரூபாய்க்கு டயர் மற்றும் டியூப் வாங்கி விட்டு, 1.85 கோடி ரூபாய் பாக்கித் தொகையை தர ஹீரோ எலக்ட்ரிக் மறுத்ததாக, மெட்ரோ டயர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டயர், டியூப் தரமற்று இருந்ததாக ஹீரோ எலக்டிரிக் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நிராகரித்த தீர்ப்பாயம், மெட்ரோ டயர்ஸ் நிறுவனம் சப்ளை செய்த டயர், டியூப்களின் தரம் குறித்து, கடிதம் வாயிலாக ஒன்பது மாதங்களுக்கு மேல் புகார் எழுப்பாத நிலையில், பாக்கி தொடர்பாக பெறப்பட்ட கடிதங்களையும் ஹீரோ எலக்ட்ரிக் ஒப்புக் கொண்டு ஏற்றுள்ளதையும் சுட்டிக்காட்டியது.

ரிசர்வ் வங்கி அனுமதி

வங்கிக் கணக்கு வாயிலாகவே, தற்போது யு.பி.ஐ., பணப்பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படுகின்றன. இனி, முழு அளவிலான கே.ஓய்.சி., பதிவு பெற்ற பிரீபெய்டு கார்டு சேவை வழங்குவோரும் யு.பி.ஐ., பணப்பரிவர்த்தனை சேவை வழங்க முடியும். எனினும், பிரீபெய்டு பேமென்ட் சேவை வழங்க அனுமதி பெற்ற வர், வங்கி வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கவோ, வேறொரு பிரீபெய்டு பேமென்ட் சேவை அங்கீகாரம் பெற்றவரை இணைக்கவோ கூடாது. குறிப்பாக, பரிசு அட்டைகள், மெட்ரோ ரயில் கார்டுகள், டிஜிட்டல் வாலட்டுகள் போன்றவற்றில் உள்ள பிரீபெய்டு தொகையில் இருந்து தான் யு.பி.ஐ., சேவையை வழங்க முடியும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினந்தோறும் அதிர்ச்சி தரும் ரூபாய் மதிப்பு சரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, நேற்று வர்த்தக நேரத்தின் இடையே, 53 பைசா சரிந்து, வரலாறு காணாத வகையில் 85.80 ரூபாயை எட்டி யது. இதற்கு முன் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி, ரூபாயின் மதிப்பு 68 பைசா சரிந்ததே, ஒரே நாளில் அதிகபட்ச சரிவாகும். அதற்கு அடுத்ததாக நேற்றைய தின வீழ்ச்சி இரண்டாம் இடத்தில் உள்ளது. நம் நாட்டு பங்குச் சந்தைகளில் பங்குகளின் மதிப்பீடு, அவற்றின் உண்மையான மதிப்பை விட அதிகரித்திருக்கும் நிலையில், பிற ஆசிய சந்தைகளில் குறைவாக உள்ளதால், அன்னிய முதலீட்டாளர்கள் பங்கு முதலீடுகளை தொடர்ந்து திரும்பப் பெறுகின்றனர். மேலும், அமெரிக்க கடன் பத்திர வருவாயும் அதிகரிப்பால், முதலீட்டாளர்களின் பார்வையை அங்கே திரும்பியுள்ளது. மற்றொரு புறம் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இவற்றின் காரணமாக, ரூபாய் தொடர் அழுத்தத்தை சந்தித்து வருகிறது. 1 டாலர் 85.80 ரூபாயை தொட்ட நிலையில், பின்னர், சரிவில் இருந்து சற்று மீண்டது. நேற்றைய வர்த்தக நேர இறுதியில் ரூபாய் மதிப்பு 21 பைசா சரிந்து, 85.48 ரூபாயாக, புதிய வீழ்ச்சியில் நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !