உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்

டி.வி.எஸ்., மோட்டார்ஸ் சர்வதேச தலைவர் நியமனம்

டி.வி.எஸ்., மோட்டார்சின் சர்வதேச வணிக தலைவராக, பேமன் கார்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மெக்கானிக்கல் இன்ஜினியரான பேமன், நிதி, உத்தி மற்றும் தலைமைத்துவத்தில் எம்.பி.ஏ., பட்டம் பெற்றவர். மேலும், இவர் துபாயில் இருந்து தன் பணியை மேற்கொள்வார் என்றும், தன் வணிக செயல்பாடுகள் குறித்த அறிக்கையை டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ராதா கிருஷ்ணனிடம் அவர் சமர்ப்பிப்பார் என்றும் டி.வி.எஸ்., தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, பேமன், நிசான் நிறுவனத்தின் சொகுசு காரான இன்பினிட்டியின் உலகளாவிய தலைவர், டட்சன் பிராண்டின் மத்திய கிழக்கு இந்திய பிராந்திய தலைமை செயல் அதிகாரி மற்றும் மூத்த துணை தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

ரூ.7,500 கோடிக்கு பெல் ஒப்பந்தம்

குஜராத்தில் உள்ள உக்காய் நகரில், சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் நிலையத்தில், 800 மெகாவாட் மின் உற்பத்தி ஆலை அமைப்பதற்காக, குஜராத் மாநில மின்சார கழகத்திடம் இருந்து, பொதுத்துறை நிறுவனமான பெல், 7,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆலை, 54 மாதங்களில் வணிக ரீதியிலான செயல்பாட்டை துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மின்துறை கட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் பெல் நிறுவனம், நாடு முழுதும் 1.70 லட்சம் மெகாவாட் மின் உற்பத்தித் திறனை நிறுவியுள்ளது.

சிட்பி வி.சி., நிறுவனம் தேர்வு

விண்வெளித்துறையில், தனியார் துறை பங்களிப்பை ஆதரிக்கும் வகையில், அரசால் ஒதுக்கப்பட்டுள்ள 1,000 கோடி ரூபாய் துணிகர மூலதன நிதிக்கான நிதி மேலாளராக, சிட்பி துணிகர மூலதன நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் 150 கோடி ரூபாயும், அடுத்த மூன்று நிதியாண்டுகளில் தலா 250 கோடி ரூபாயும், 2029 - 30ம் நிதியாண்டில் 100 கோடி ரூபாயும் என, ஐந்தாண்டுகளுக்கு 1,000 கோடி ரூபாய் நிதியை முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இந்திய விண்வெளி தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்தியாவை விட்டு வெளியே செல்வதை தடுக்கும் நோக்கிலேயே, இந்நிதி அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை