உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்

24 மந்த்ரா ஆர்கானிக் ஐ.டி.சி., வசமாகிறது

வேகமாக வளர்ந்து வரும் ஆர்கானிக் உணவுப் பொருட்களில் தன் பங்கை விரிவுபடுத்தும் வகையில், '24 மந்த்ரா ஆர்கானிக்' பிராண்டை வைத்திருக்கும் எஸ்.என்.பி.பி.எல்., எனப்படும் 'ஸ்ரெஸ்டா நேச்சுரல் பயோபுராடக்ட்ஸ்' நிறுவனத்தை 472.50 கோடி ரூபாய் மதிப்பில் கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக, பங்குச் சந்தை தாக்கலில் ஐ.டி.சி., நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 'மதர் ஸ்பார்ஷ் பேபி கேர்' என்ற இணை நிறுவனத்தில், மீதமுள்ள 73.50 சதவீத பங்குகளையும் கையகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, கடந்த 2022ல் மதர் ஸ்பார்சின் 26.50 சதவீத பங்குகளை ஐ.டி.சி., வாங்கியுள்ளது.

'இன்போசிஸ்' சலீல் பரேக்கிற்கு ரூ.51 கோடி

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சலீல் பரேக்கிற்கு, 51 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடைய ஊழியர் பங்கு விருப்ப திட்டங்களை வழங்க, அந்நிறுவனத்தின் நிர்வாகக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுகுறித்த பங்குச் சந்தை தாக்கலில், நியமனம் மற்றும் ஊதியக்குழு பரிந்துரையின் கீழ், பங்குதாரர்களால் அங்கீகரிக்கப்பட்ட பரேக்கின் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த அங்கீகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் முடிவால் அசென்ச்சர் பாதிப்பு

அசென்ச்சர், டெலாய்ட் உள்ளிட்ட நிறுவனங்களுடனான அத்தியாவசியமற்ற தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. முக்கிய நிறுவனங்களுடனான 5.1 பில்லியன், அதாவது இந்திய மதிப்பில் 43,860 கோடி ரூபாய் மதிப்பிலான தகவல் தொழில்நுட்ப சேவை ஒப்பந்தங்களை நிறுத்துவதாக, அந்நாட்டின் பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் அறிவித்துள்ளார். மூன்றாம் தரப்பு ஆலோசகர்களுக்கான அத்தியாவசியமற்ற செலவுகள் என்று கருதுவதன் அடிப்படையில், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். நிறுத்தப்பட்ட இந்த ஒப்பந்தங்களின் வாயிலாக, கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் 34,400 கோடி ரூபாய் மிச்சமாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை