வர்த்தக துளிகள்
இண்டிகோவுக்கு புதிய தலைவர்
இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைவராக விக்ரம் சிங் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தலைவராக இருந்த வெங்கடரமணி சுமந்திரன் ஓய்வு பெற்றதையடுத்து, இயக்குநர் குழு உறுப்பினரான விக்ரம் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், ஷெல் குழுமத்தின் தலைவராகவும்; ப்ரூக்கிங்ஸ் இந்தியா நிறுவனத்தின் செயல் தலைவராகவும் ஏற்கனவே பணியாற்றியுள்ளார்.
பயனீர் ஆராய்ச்சி மையம்
ஜப்பானைச் சேர்ந்த பயனீர் கார்ப்பரேஷனின் இந்திய பிரிவு, வாகனங்களுக்கான ஸ்மார்ட் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை பெங்களூரில் துவங்கியுள்ளது. இந்த மையத்தில் வாகன மற்றும் போக்குவரத்து சார்ந்த தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனீர் நிறுவனம், கார்களில் ஆடியோ-வீடியோ வசதிகளை அமைப்பதில் பிரதானமாக கவனம் செலுத்தி வருகிறது.