வர்த்தக துளிகள்
ஜூனில் குறைந்தது வர்த்தக பற்றாக்குறை
இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை, மே மாதத்தில் இருந்த 1.86 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, கடந்த ஜூனில் 1.76 லட்சம் கோடி ரூபாயாக சற்றே குறைந்துள்ளதாக யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு கச்சா எண்ணெய் விலைகள் குறைந்தது, தங்க இறக்குமதி மந்தமானது மற்றும் உலகளாவிய பொருட்கள் விலை தாக்கங்களை கட்டுப்படுத்த உதவிய மறுசீரமைக்கப்பட்ட கொள்முதல் உத்தியே காரணம் என, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி
11 மாதங்களில் இல்லாத உச்சம்
கடந்த ஜூன் மாதத்தில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், 11 மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. மேற்காசியாவில் நிலவும் பதற்றங்கள் மற்றும் தள்ளுபடி விலைகள் காரணமாக, இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி, நாளொன்றுக்கு 2.08 மில்லியன் பீப்பாய்களாக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த இறக்குமதி குறைந்த போதிலும், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அளவு அதிகரித்துள்ளது. ரஷ்யா இந்தியாவின் முக்கிய வினியோகஸ்தராக உள்ளது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யா 40 சதவீத பங்களிப்பை அளித்துள்ளது. 70% ஊக்கத்தொகையை பெற்ற மின்னணு - மருந்து துறைகள்
உற்பத்தி சார் ஊக்கத்தொகை திட்டங்களின் கீழ், கடந்த 2024 - 25ம் நிதியாண்டில் வழங்கப்பட்ட மொத்த ஊக்கத் தொகை நிதியில், கிட்டத்தட்ட 70 சதவீதம் தொகையை பெரிய அளவிலான மின்னணு உற்பத்தி மற்றும் மருந்துத்துறைகள் பெற்றுள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. தரவுகளின்படி, அரசு கடந்த நிதியாண்டில் மொத்தம் 10,144 கோடி ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கியுள்ளது. இதில், மின்னணு துறை நிறுவனங்கள் 5,732 கோடி ரூபாயையும், மருந்து பொருட்கள் துறை 2,328 கோடி ரூபாயையும் பெற்றிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.