வர்த்தக துளிகள்
எண்ணெய் நிறுவனங்கள் முடிவு
அமெரிக்காவின் பொருளாதார தடையை எதிர்கொண்டுள்ள ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களிடம் கச்சா எண்ணெய் வாங்க, இந்திய நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயில் நிறுவனங்களிடம் இருந்து வரும் கச்சா எண்ணெய்யை, இனி வர்த்தகர்களிடமிருந்து வாங்கப்போவதில்லை என இந்திய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விழிஞ்ஞம் துறைமுகத்தில் எல்.என்.ஜி.,
நம் நாட்டின் முதல் எல்.என்.ஜி., எரிபொருள் நிலையம் கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் அமைய உள்ளது. விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தில், கப்பலுக்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு நிரப்பும் வசதி அமையவுள்ளது. இதற்காக, அதானி துறைமுகங்கள் மற்றும் பி.பி.சி.எல்., ஆகிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த மையம் கிழக்கு-மேற்கு கப்பல் வழித்தடத்தில் செல்லும் சர்வதேச கப்பல்களுக்கு எல்.என்.ஜி., எரிபொருள் நிரப்பும் மையமாகச் செயல்படும். சாட்ஜிபிடி ஓராண்டு இலவசம்
இந்திய பயனர்களுக்கு சாட்ஜிபிடி கோ என்ற ஏ.ஐ., கருவியின் பயன்பாடு, ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படும் என ஓபன்ஏஐ தளம் அறிவித்துள்ளது. நம் நாட்டில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், நவ.4 முதல் பதிவு செய்யும் அனைத்து பயனர்களுக்கும் சாட்ஜிபிடி கோ சந்தா, ஒரு ஆண்டிற்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. நவ.4ல் பெங்களூருவில் நடைபெறவுள்ள டேவ்டே எக்ஸ்சேஞ் நிகழ்வில் இது துவங்கப்பட உள்ளது.