உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்

இந்தியாவில் வேலை: டெஸ்லா

இந்திய வாகன சந்தையில் அடியெடுத்து வைக்கும் விதமாக, அமெரிக்காவின் டெஸ்லா கார் நிறுவனம், இந்தியாவில் ஆட்களை நியமிப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தன் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்கின் கார் தயாரிப்பு நிறுவனமான 'டெஸ்லா' நிறுவனம், உலகின் மூன்றாவது பெரிய வாகன சந்தையான இந்தியாவில் நுழைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மும்பையில் தங்கள் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சேவை தொடர்பான 13 வகை பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை, வலைதளத்தில் பட்டியலிட்டுள்ளது. அதிக இறக்குமதி வரியை காரணம் காட்டி, கடந்தாண்டு இந்திய வாகன சந்தையில் நுழைய மஸ்க் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் 110ல் இருந்து 70ஆக வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதுடன், சமீபத்தில் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, மஸ்க்குடன் நடத்திய சந்திப்பைத் தொடர்ந்து இச்செய்தி வெளியாகியுள்ளது.

10 இந்திய நிறுவனங்கள் மதிப்பு சவுதி ஜி.டி.பி.,யை விட அதிகம்

நாட்டின் 'டாப் 10' நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 95.70 லட்சம் கோடி ரூபாய் என 'ஹூருன் இந்தியா' நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சவுதி அரேபியாவின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பைக் காட்டிலும் அதிகமாகும். அதே நேரத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 33 சதவீதமாகும். கடந்த 2024ம் ஆண்டுக்கான இந்தியாவின் டாப் 500 நிறுவனங்கள் குறித்த அறிக்கையை, 'பர்கண்டி' நிறுவனத்துடன் இணைந்து, ஹூருன் இந்தியா வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 9,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட நிறுவனங்கள் மட்டுமே, இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. டாப் 500 நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 324 லட்சம் கோடி ரூபாய் எனவும், இது இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பைக் காட்டிலும் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ