டிக்டாக் செயலி மதிப்பு ரூ.1.24 லட்சம் கோடி கையகப்படுத்த கையெழுத்திட்டார் டிரம்ப்
வாஷிங்டன்:டிக்டாக் செயலியின் அமெரிக்க வர்த்தகத்தை கையகப்படுத்த, 14 பில்லியன் டாலர்கள், அதாவது 1.24 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிட்டு, அதிபர் டிரம்ப் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான செயலி டிக்டாக். இதன் செயல்பாடுகள், அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக, அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டினார். அமெரிக்காவில் டிக்டாக் செயலியின் இயக்கத்தை, அமெரிக்க நிறுவனத்திடம் பெரும்பான்மை பங்குகளாக பைட் டான்ஸ் நிறுவனம் விற்க வேண்டும்; தவறினால், அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யப்படும் என எச்சரித்திருந்தார். இந்நிலையில், அமெரிக்காவில் டிக்டாக் இயக்கத்துக்கு கூட்டு நிறுவனம் ஏற்படுத்த, அந்த செயலியின் மதிப்பை 1.24 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயித்து, அரசு ஆணையில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக, துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். இதன் வாயிலாக, டிக்டாக் செயலியின் அமெரிக்க கூட்டு நிறுவனத்தில் பைட் டான்ஸ் நிறுவனத்தின் பங்கு 20 சதவீதமாகவும் அமெரிக்க முதலீட்டாளர்களின் பங்கு 80 சதவீதமாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டு நிறுவனத்தால் இயக்கப்படவுள்ள இந்த செயலி, அமெரிக்க தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தேவையான அம்சங்களை திருப்திப்படுத்துவதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்டாக் செயலியின் அமெரிக்க கூட்டு நிறுவனத்தில், ஆரக்கிள், சில்வர் லேக், அபுதாபியைச் சேர்ந்த எம்.சி.எக்ஸ்., இன்வெஸ்மென்ட் பண்டு ஆகிய நிறுவனங்கள் முக்கிய முதலீட்டாளர்களாக இருக்கும் எனத் தெரிகிறது. இதற்கிடையே, அரசு ஆணையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டாலும், பைட் டான்ஸ் பிரதிநிதிகள் யாரும் இல்லாததும் சீனா இன்னும் இதற்கு ஒப்புதல் அளிக்காததும் முக்கியத்துவம் பெறுகிறது.