உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  விவசாயத்தில் பசுமை எரிபொருளுக்கு ஊக்கம்: மத்திய வேளாண் செயலர் உறுதி

 விவசாயத்தில் பசுமை எரிபொருளுக்கு ஊக்கம்: மத்திய வேளாண் செயலர் உறுதி

புதுடில்லி:விவசாய கருவிகளில் பசுமை எரிபொருளில் இயங்கும் கருவிகளுக்கு அரசு முன்னுரிமை வழங்கும் எனவும், அக்கருவிகள் எளிதில் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய வேளாண் துறை செயலர் தேவேஷ் சதுர்வேதி தெரிவித்துள்ளார். பிக்கி அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தெரிவித்ததாவது: எதிர்வரும் 2047ம் ஆண்டுக்குள், உலகின் உணவு மையமாக உருவெடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. அடுத்த 5-10 ஆண்டுகளில், நம் தொழில்நுட்பங்களை பசுமை எரிபொருட்களை நோக்கி நகர்த்த வேண்டும். அவை மின்சார டிராக்டர்களாக இருந்தாலும் சரி, அல்லது ஊரக பகுதி சி.பி.ஜி., ஆலைகளில் கிடைக்கும் பயோ எரிவாயுவில் இயங்கும் மோட்டாராக இருந்தாலும் சரி. அவ்வாறு செய்தால் விவசாயிகளின் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு செலவுகள் குறையும். அரசும், சுற்றுச் சூழலுக்கு ஏற்ற எரிபொருள் தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கும். இதில் இத்தாலி போன்ற நாடுகளுடன் கூட்டாக இணைந்து செயல்படலாம். விவசாயிகளின் வருவாயை உயர்த்த சாகுபடி செலவுகளை குறைப்பது, உற்பத்தியை அதிகரிப்பது, மதிப்பு கூட்டுதல் வாயிலாக நல்ல விலை பெறுவது, காலநிலை மாற்றத்தை தாங்கும் திறனை உருவாக்குதல் ஆகியவை முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !