உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வெள்ளி விலையை குறைக்க உதவிய அமெரிக்கா, சீனா

வெள்ளி விலையை குறைக்க உதவிய அமெரிக்கா, சீனா

புதுடில்லி: அமெரிக்கா மற்றும் சீனாவிலிருந்து அதிக அளவிலான வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக, லண்டன் ஸ்பாட் மார்க்கெட்டில் நிலவிய வெள்ளி தட்டுப்பாடு சீரடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் லண்டனில் வெள்ளி கிடைப்பதில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக, வெள்ளி விலை சாதனை உச்சத்தை எட்டியது. இதனால், விமானம் வாயிலாக வெள்ளியை இறக்குமதி செய்வது கூட விற்பனையாளர்களுக்கு லாபகரமானதாக மாறியது. இந்நிலையில் கடந்த வாரம் அமெரிக்கா மற்றும் சீனாவிலிருந்து கிட்டத்தட்ட 1,000 டன் வெள்ளி லண்டனில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த வெள்ளியன்று கிட்டத்தட்ட 4,800 ரூபாயாக இருந்த ஒரு ட்ராய் அவுன்ஸ் அதாவது 31 கிராம் வெள்ளி, நேற்று முன்தினம் 4,600 ரூபாயாக குறைந்துள்ளது. லண்டனில் குறுகிய கால வெள்ளி கடன் வட்டி விகிதங்களும் குறைந்துள்ளன. கடந்த மாத இறுதி நிலவரப்படி, லண்டன் சேமிப்பு கிடங்கில் இருக்கும் வெள்ளியில் 83 சதவீதம், வெள்ளி இ.டி.எப்.,களுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. சீன வெள்ளி இறக்குமதியின் பெரும்பகுதி லண்டனுக்கு சென்றாலும், பிரிட்டன் மற்றும் இந்தியா இடையே போட்டி நிலவுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். பண்டிகை கால தேவை அதிகரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக இந்தியாவில் வெள்ளி பிரீமியங்கள் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !