அமெரிக்க வரி நிர்ணயம் சுமுக தீர்வு எட்டப்படும்: இந்திய ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை
திருப்பூர்: ‘இந்தியா – அமெரிக்கா ஏற்றுமதி வர்த்தக உறவு முக்கியம் என்பதால், வரி நிர்ணயத்தில் சுமுக தீர்வு எட்டப்படும்’ என, ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு பின், அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி அபார வளர்ச்சி பெற்றது. குறிப்பாக, ஆடை ஏற்றுமதி வர்த்தகம் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றது. 2025 ஜூனில் இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு, 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. அமெரிக்க உச்ச நீதிமன்ற தலையீட்டால், கடந்த பிப்., மாதம் வரி உயர்வு ரத்து செய்யப்பட்டது. அதன்பின், இந்திய ஆடைகளுக்கான இறக்குமதி வரி, 10 சதவீதமாக இருந்து வருகிறது. விரிவான வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்க, பரஸ்பரம் பேச்சு நடந்து வரும் நிலையில், 15 நாடுகளுக்கான வரி விதிப்பு குறித்து அமெரிக்கா அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி இந்தியாவுக்கு, 25 சதவீதம் வரிவிதிக்கப்படும். முன்னதாக ஒப்பந்தம் நிறைவேறினால், 17 சதவீதமாக வரி குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான இறுதிக்கட்ட பேச்சில் சுமுக உடன்பாடு ஏற்படும்; வரும், ஜனவரி மாதம் வரை அவகாசம் இருப்பதால், அதற்குள் பரஸ்பர ஒப்புதலுடன் வரி நிர்ணயம் இருக்குமென, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர். ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல் கூறுகையில்,‘‘அமெரிக்கா முன்மொழிந்த வரி என்பது தற்காலிகமானது; உறுதியாகவில்லை. பேச்சு வாயிலாக இறுதி செய்யப்படுமென, வர்த்தக துறை அமைச்சர் பீயூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜன., 27 வரை அவகாசம் இருப்பதால், அதற்குள் சுமுகமான வரி நிர்ணயம் செய்ய வாய்ப்புள்ளது,’’ என்றார். வரும் ஜனவரி மாதம் வரை அவகாசம் இருப்பதால், அதற்குள் பரஸ்பர ஒப்புதலுடன் வரி நிர்ணயம் இருக்குமென தொழில்துறையினர் எதிர்பார்ப்பு