உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  கோதுமை ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

 கோதுமை ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

புதுடில்லி: நம் நாட்டிலிருந்து கோதுமை மற்றும் துரம் கோதுமையை ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியுள்ளது. குறிப்பிட்ட எச்.எஸ். குறியீடுகளின் கீழ் வரும் கோதுமை மற்றும் கோதுமை மாவு பொருட்களை இனி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என, வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதன்படி, துரம் கோதுமை, கோதுமை, ஆட்டா, மைதா, ரவை, முழு கோதுமை ஆட்டா உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்கும், உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கும் இதுவரை கோதுமை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது அவை நீக்கப்பட்டுள்ளதால், வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் வெளிநாட்டு சந்தைகளில் இந்திய கோதுமை மற்றும் மாவுப்பொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. நாட்டின் வெளிநாட்டு வர்த்தக கொள்கை மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி கொள்கையில் மாற்றம்

கோதுமை மாவை, 'தடை' என்ற பிரிவில் இருந்து 'தடையற்ற ஏற்றுமதி' என்ற பிரிவுக்கு மத்திய அரசு மாற்றியுள்ளது. இதற்கான ஏற்றுமதி கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய திருத்தத்தின்படி கோதுமை அல்லது மெஸ்லின் மாவு (ஆட்டா), மைதா, ரவை, முழு கோதுமை ஆட்டா உள்ளிட்ட பொருட்கள் இனி 'தடையற்ற ஏற்றுமதி'பிரிவில் இடம்பெறும். உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதுடன், விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், 2022 மே 13ல் கோதுமை ஏற்றுமதி கொள்கையில் 'தடையற்றது' என்பதில் இருந்து 'தடை' என்ற வகைப்பாட்டுக்கு கோதுமை மாற்றப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்டில் கோதுமை மாவு ஏற்றுமதிக்கும் இந்த கட்டுப்பாடு விரிவுபடுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்