உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டிரம்ப் யோசனை எடுபடுமா?

டிரம்ப் யோசனை எடுபடுமா?

அன்றாடம் எதையாவது சொல்லி தலைப்பு செய்திகளில் இடம் பிடிப்பதில் ஆர்வம் கொண்டவர், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். அண்மையில் நிறுவனங்கள் தங்களது காலாண்டு முடிவுகளை வெளியிடுவது குறித்து ஒரு கருத்தைக் கூறி தொழில்துறையினரின் பார்வையை தன் பக்கம் இழுத்திருக்கிறார். நிறுவனங்கள், தங்களது நிதி நிலை அறிக்கையை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடுகின்றன. இந்நிலையில் இப்படி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காலாண்டு முடிவுகளை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என டிரம்ப் தெரிவித்துள்ள கருத்து, தொழில் துறை வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. காலாண்டு அறிக்கை ஏன்? ஒவ்வொரு மூன்று மாதங்களி லும் வெளிவரும் காலாண்டு அறிக்கை என்பது, ஒரு வணிக நிறுவனத்தின் மதிப்பெண் அட்டை போன்றது. முதலீட்டாளர்களும், நிதி பகுப்பாய்வாளர்களும் காலாண்டு அறிக்கைகளை வைத்து, அந்த நிறுவனம் எப்படி செயல்படுகிறது என்பதை கண்காணிக்கின்றனர். இதனால் பங்குச் சந்தை விலைகள் மாறும், முதலீட்டு திட்டங்கள் வடிவம் பெறும், மேலாண்மை முடிவுகளுக்கும் வழிகாட்டியாக இருக்கும். ஆனால், இவை முழுமையான தணிக்கையுடன் வராததாலும், அந்த காலத்தில் விற்பனை, செலவுகள், லாபம் மற்றும் பணப்புழக்கம் பற்றிய தெளிவான படிமம் இருப்பதில்லை என்றும் கூறி இந்த அறிக்கைகள் தேவையற்றவை என்கிறார், டிரம்ப். எப்போது துவங்கிய நடைமுறை? கடந்த 1970ம் ஆண்டு வரை, அமெரிக்க நிறுவனங்கள், ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே அறிக்கையை சமர்ப்பித்தன. 2000வது ஆண்டுகளின் தொடக்கத்தில் நடந்த 'என்ரான்' போன்ற பெரும் ஊழல்களுக்கு பின், நிலைமை மேலும் கடுமையானது. கடந்த 2002ல் நிறுவனங்களின் காலாண்டு படிவம், '10 க்யூ' உள்ளிட்ட நிதி அறிக்கைகளில் நேரடியாக நிறுவனங்களின் சி.இ.ஓ., கையெழுத்திட வேண்டிய கட்டாயம் உருவானது. ஆனால், டிரம்ப் கருத்து இதற்கு மாறானதாக உள்ளது. காலாண்டு அறிக்கைகளால் செலவுகள் அதிகரிக்கின்றன, நிர்வாகிகள் நீண்டகால வளர்ச்சியை விட, குறுகிய கால லாபத்தில் அதிக கவனம் செலுத்துகின்றனர் என்கிறார். காலாண்டு முறையை நிறுத்தி, மீண்டும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அறிக்கை வெளியிடும் நடைமுறை தேவை என்பதே அவரது வாதம். உண்மையில், டிரம்பின் வாதத்தில் ஒரு நியாயமும் இருக்கிறது. காலாண்டு முடிவுகளைத் தயாரிப்பது எளிய செயல் அல்ல. கணக்குகளைத் தொகுப்பதற்கே நிறுவனங்கள் வாரக்கணக்கில் செலவழிக்கின்றன. அதற்குள் அடுத்த காலாண்டு தொடங்கிவிடுகிறது. இதற்கான நேரம் மற்றும் பணத்தை வணிகத்தை முன்னேற்றுவதற்கோ அல்லது நீண்டகால முதலீட்டிற்கோ பயன்படுத்தலாம் என்பது அவர் பார்வை. நிதி இலக்கு மீது அழுத்தம் இங்கே முக்கியமான சிக்கல், குறுகியகால நோக்கம். ஒவ்வொரு காலாண்டும் தாக்கல் செய்ய வேண்டியதால், நிர்வாகிகள் உடனடி இலக்கை அடைய அழுத்தம் தரப்படுகின்றனர். அந்த காலாண்டு இலக்குகளை தவற விட்டால், பங்கின் விலை சரியும்; முதலீட்டாளர்கள் பீதி அடைவர். மேலும், அமெரிக்காவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. 1996ல் கிட்டத்தட்ட 8,090 நிறுவனங்கள் இருந்த நிலையில், 2024 இறுதியில் அவை 3,952 ஆக குறைந்தன. இதற்குக் காரணம் பெரிய நிறுவனங்களின் இணைப்பு, அதேசமயம் அதிக கட்டுப்பாடுகள். டிரம்பின் பார்வை எளிதானது. சிறிய நிறுவனங்கள் பங்குச் சந்தையில் அதிகம் சேர வேண்டும். அவை வேலைவாய்ப்பு உருவாக்கும், முதலீட்டை ஈர்க்கும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பது. அதற்கான வழி, காலாண்டு அறிக்கைகளை ரத்து செய்து, செலவு மற்றும் ஒழுங்குமுறை சுமையை குறைப்பது. டிரம்ப் கருத்து புதிதல்ல டிரம்பின் இந்த யோசனை இப்போதுதான் கூறப்பட்டது அல்ல. 2018ல் தன் முதல் பதவி காலத்திலேயே, இதுபற்றி அவர் கருத்து கேட்டிருந்தார். அமெரிக்கா மட்டுமல்ல, பிரிட்டனும் இதே சிக்கலை எதிர்கொண்டது. 2007ல் அவர்கள் காலாண்டு அறிக்கைகளை கட்டாயமாக்கினர். ஆனால், 2014ல் அதை ரத்து செய்தபோதும், முதலீடுகள் அதிகரிக்கவில்லை. அதேநேரம், பெரும்பாலான நிறுவனங்கள் தன்னார்வமாகவே காலாண்டு அறிக்கைகள் வெளியிடுவதை தொடர்ந்தன. எதையாவது மறைக்கின்றனரா என, நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் சந்தேகிக்கக்கூடாது என்பதற்காக. இதுவே, 2018ல் டிரம்பின் பரிந்துரையை நிறுவனங்கள் ஏற்காமல் இருந்ததற்கு காரணம். ஏனெனில், பிரிட்டனே உதாரணம் காட்டுகிறது. அறிக்கைகள் குறைந்தாலும், ஐ.பி.ஓ.,க்கள் அதிகரிக்கவில்லை. 2025 முதல் பாதியில் லண்டனில் ஐ.பி.ஓ., வில் திரட்டப்பட்ட நிதி, கடந்த 1995க்கு பின் மிகக் குறைந்ததாகவே இருந்தது. எனவே, டிரம்ப் நிர்வாகம் இதை மீண்டும் வலியுறுத்தினாலும், காலாண்டு அறிக்கைகளை முழுமையாக ரத்து செய்வது எந்த பலனையும் அளிக்காது என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. l காலாண்டு அறிக்கைகளால் செலவுகள் அதிகரிக்கின்றன l நிர்வாகிகள் நீண்டகால வளர்ச்சியை விட, குறுகிய கால லாபத்தில் அதிக கவனம் செலுத்துகின்றனர் l ஆறு மாதத்திற்கு ஒருமுறை அறிக்கை வெளியிட்டால் போதுமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ