பங்கு முதலீட்டில் பெண்கள் ஆர்வம்
ப ங்குச்சந்தை முதலீடு பெரும்பாலும் ஆண்கள் சார்ந்ததாக கருதப்படும் நிலைக்கு மாறாக அண்மை ஆண்டுகளில், பங்கு முதலீட்டில் ஆர்வம் காட்டும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. செயலி மூலம் முதலீடுகளை மேற்கொள்ள உதவும் நிதிச்சேவை நிறுவனம் ஜிரோதா வசம் உள்ள தரவுகள் அடிப்படையில், முதலீடு செய்பவர்களில் 30 சதவீதம் பெண்கள் என தெரிய வந்து உள்ளது. பத்தாண்டுகளுக்கு முன் இந்த எண்ணிக்கை 3 சதவீதம் அளவிலேயே இருந்தது. மேலும் கடந்த ஐந்தாண்டுகளில் பங்கு முதலீட்டில் ஆண்களின் பங்கு 5 சதவீதம் குறைந்துள்ளது. பெண்கள் அதிக அளவில் பங்கு முதலீட்டில் ஆர்வம் காட்டுவது, முதலீடு பரப்பில் ஏற்பட்டு வரும் பரவலான மாற்றத்தின் அடையாளமாக அமைந்துள்ளது. ஜிரோதா வசம் உள்ள பெண் முதலீட்டாளர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 50 சதவீத பெண்கள் சுயமாக முதலீடு முடிவுகளை மேற்கொள்வதும் தெரிய வந்துள்ளது என இந்நிறுவன சி.இ.ஓ. நிதின் காமத் கூறியுள்ளார். பெண்கள் நிதி சுதந்திரம் பெறுவதற்கு முக்கிய முன்னேற்றமாக இது அமைவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.