பண்டிகை கால தள்ளுபடி விற்பனை ஒப்பிட்டு வாங்க உதவும் செயலிகள்
இ னி பண்டிகை காலம் தான். தள்ளுபடி அறிவிப்புகள் மழையாகக் கொட்டும். எதில் விலை குறைவாக இருக்கிறது; எங்கு வாங்கினால் அதிக வெகுமதிகள் கிடைக்கும் என்பதை கண்டுபிடிப்பது என்பது மலைப்பாக இருக்கலாம். ஆனால், அதை எளிதாக்கும் வகையில் பல வசதிகள் இருக்கின்றன. இவற்றை பயன்படுத்தி விலைகள், வெகுமதிகளை ஒப்பிட்டு, பயனடையலாம். உங்கள் வசதிக்காக அவற்றில் சில இங்கே: பைஹேட்கே:
இது ஒரு ஏ.ஐ. வசதி கொண்ட ஷாப்பிங் உதவி செயலியாகும். இணையதளங்களில் விலையை ஒப்பிட்டுப் பார்ப்பது, விலை ஏற்ற இறக்கத்தைக் காண்பிப்பது மற்றும் விலை குறைந்தவுடன் தகவல் கொடுப்பது போன்ற பல விஷயங்களை இது செய்கிறது. டீல்கள் உண்மையானதா என்பதை சரிபார்க்க பயனுள்ளதாக இருக்கும். தேசிடைம்:
இது பயனர்களால் இயக்கப்படும் ஒரு சமூக வலைத்தளம். இதில் பயனர்கள் புதிய சலுகைகள் மற்றும் தள்ளுபடி கூப்பன்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். பண்டிகை கால விற்பனைகளின் போது, மற்ற பயனர்களிடமிருந்து உடனுக்குடன் தகவல்களைப் பெற இது மிகவும் சிறந்தது. பிரைஸ் ஹிஸ்டரி ஆப்:
இணையதளங்களில் விலை மாற்றங்களைக் கண்காணித்து, எப்போது வாங்குவது, சிறந்த நேரம் எது என்பதைக் கண்டறிய உதவுகிறது. தி டீல் ஆப்:
இந்தச் செயலி பல்வேறு கடைகளின் டீல்கள், புரோமோ கோடுகள், கேஷ்பேக் சலுகைகள் மற்றும் இலவசங்களை வழங்குகிறது. விற்பனையின் போது உடனுக்குடன் கூப்பன்களைப் பெற இது பயனுள்ளதாக இருக்கும். டீல்ஸ்மேக்னட்:
இணையதளங்களில் முன்னணி தள்ளுபடிகள், சலுகைகள் மற்றும் கூப்பன்களை ஒருங்கிணைக்கும் ஒரு வலைத்தளமாகும். ஆபர்டேக்:
இது தள்ளுபடிகள், விற்பனை பற்றிய தகவல்கள், மற்றும் புரோமோ கோடுகளைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு சமூக வலைத்தளம். பயனர்கள் பகிரும் சிறந்த டீல்களைக் கண்டறிய இது உதவியாக இருக்கும். பைசா வாபஸ்:
இது ஒரு கேஷ்பேக் வலைத்தளமாகும். 'பிக் பில்லியன் டேஸ்' போன்ற விற்பனையின்போது, உங்கள் வாங்குதலில் கூடுதல் கேஷ்பேக் பெற இது உதவுகிறது. இந்தக் கருவிகள் நமக்கு ஒரு ஆலோசனை அல்லது வழிகாட்டுதலாக இருக்கும். முழுக்க இதை மட்டுமே நம்பி பொருட்களை வாங்காமல், வாடிக்கையாளார்களின் சமீபத்திய விமர்சனங்களையும் பார்த்துவிட்டு முடிவெடுப்பது நன்மைபயப்பதாக இருக்கும்.