கமாடிட்டி சந்தைக்கு வரும் வங்கிகள், பென்ஷன் பண்டுகள்
வ ங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பென்ஷன் பண்டுகள் ஆகியவற்றை கமாடிட்டி டெரிவேட்டிவ் சந்தையில் பங்கேற்க செபி அனுமதியளிக்க திட்டமிட்டு வருகிறது. இதன் சாதக பாதகங்கள் என்னென்னவாக இருக்கும்? முதலில், இதனால், வர்த்தகம் அதிகரிக்கும், பரிவர்த்தனை செலவுகள் குறையும், விலையை நிர்ணயிப்பதும் சுலபமாகும். இந்த கமாடிட்டி டெரிவேட்டிவ் சந்தையில் பெருநிதி நிறுவனங்கள் பங்கேற்பதன் வாயிலாக, புதிய நிதி சார்ந்த திட்டங்கள் உருவாகும். உதாரணமாக, கமாடிட்டி சார்ந்த இ.டி.எப்.கள், மியூச்சுவல் பண்டு திட்டங்கள், பியூச்சர்ஸ் அண்டு ஆப்ஷன்ஸ் ஆகியவை உருவாகும். இந்தப் பெருநிதி நிறுவனங்கள் எப்படி கமாடிட்டி சந்தையில் பங்கேற்கப் போகின்றன என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால், செபி அரசுடன் மேற்கொண்டுவரும் பேச்சுகள் சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறது. அதோடு, அந்நிய நிறுவன முதலீட்டாளர்களையும், ரொக்கமில்லாத, வேளாண் பொருட்கள் அல்லாத, கமாடிட்டி டெரிவேட்டிவ்களில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கவும் செபி யோசித்து வருவது வரவேற்கத்தக்கது. இந்தியாவில் கமாடிட்டி சந்தையை விரிவுப டுத்த வேண்டும் என்பதே செபியின் நோக்கம். அதற்காக பல்வேறு பெருநிறுவனங்களை உள்ளே அனுமதிப்பதன் வாயிலாக, கூடுதலான நிதிப் புழக்கத்தைக் கொண்டுவர முடியும். மேலும் இந்தச் சந்தையானது, இடர்களைச் சமாளிக்க உதவும் கவர்ச்சிகரமான முதலீடாகவும் மாறும். தற்சமயம், பெரிய நிறுவனங்கள், வர்த்தகர்கள், இறக்குமதியாளர்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் ஆகியவை கமாடிட்டி சந்தையில் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும், பென்ஷன் பண்டுகளும் இந்த சந்தையில் இறங்கும்போது, இதன் வீச்சு மேலும் விரிவடையும். உலகச் சந்தையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதற்கும் உதவும். கமாடிட்டி டெரிவேட்டிவ்கள் மிக மிக நேர்த்தியானவை. மற்ற முதலீடுகளில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டுவதற்கான 'ஹெட்ஜிங்' வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது உண்மை தான். ஆனால், தொடர்ச்சியாக இதில் ஈடுபடுவதன் வாயிலாக, குறிப்பிட்ட நிதி நிறுவனங்களில் நீண்டகால ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகலாம். சிறு முதலீட்டாளர்களும் இதில் உள்ள அபாயத்தை புரிந்துகொள்ள வேண்டும். கமாடிட்டி சந்தையைப் பற்றியும், அதில் உள்ள டெரிவேட்டிவ்கள் பற்றியும் தெளிவு இல்லையெனில், நஷ்டம் ஏற்பட வாய்ப்பு அதிகம். மேலும், கமாடிட்டி டெரிவேட்டில் பற்றிய பல செய்திகள், நடைமுறைகள் தெரியவருவதற்கு இன்னும் கொஞ்சம் காலம் ஆகும். அதனால் இந்த ஆரம்ப கற்றுக்கொள்ளும் காலத்தில், சிறு முதலீட்டாளர்கள் தேவையற்ற ரிஸ்க்குகளை தவிர்ப்பது நல்லது.