உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / போரக்ஸ் :அமெரிக்க வரி குறித்து தெளிவு வரும் வரை ரூபாய் மதிப்பு பெரிதாக உயர வாய்ப்பில்லை

போரக்ஸ் :அமெரிக்க வரி குறித்து தெளிவு வரும் வரை ரூபாய் மதிப்பு பெரிதாக உயர வாய்ப்பில்லை

நேற்றைய வர்த்தகத்தின் முடிவில், இந்திய ரூபாயின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு எதிராக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. உலக சந்தைகளில் அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்ற, இறக்கமாக இருந்தபோதிலும் இது நிகழ்ந்தது. அமெரிக்கா - இந்தியா இடையே, வர்த்தக ஒப்பந்தம் பற்றிய பேச்சுகள் மீண்டும் துவங்கியுள்ளன. இது ரூபாயின் மதிப்புக்கு ஒருவித ஆதரவைக் கொடுத்துள்ளது. வர்த்தக பேச்சுகள் இரு நாடுகளுக்குமிடையே நிலவும் பதற்றத்தைக் குறைத்தாலும், வரிகள் குறித்து தெளிவான நிலை வரும் வரை, ரூபாயின் மதிப்பு பெரிய அளவில் உயர வாய்ப்பில்லை. அமெரிக்க தரவுகள் அமெரிக்காவில் கடந்த ஓராண்டில் 9.11 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது குறைவே. அமெரிக்கப் பொருளாதாரம் ஏற்கனவே மந்த நிலையில் இருப்பதையே இது காட்டுகிறது. எனவே, வரும் 16 - -17ம் தேதிகளில் நடைபெறும் கூட்டத்தில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் குறைந்தால், டாலரின் மதிப்பு வலுவிழந்து, இந்திய ரூபாய் போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் நாணயங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். இந்தியாவின் நிதி நிலை இந்தியாவைப் பொறுத்தவரை, மத்திய நிதியமைச்சர், நிதிப் பற்றாக்குறை இலக்கை கடைப்பிடிப்பதாகவும், கூடுதல் கடன் வாங்குவதைத் தவிர்க்க இருப்பதாகவும் கூறியது, சந்தையில் நல்லதொரு மனநிலையை உருவாக்கியுள்ளது. இது, ரூபாயின் மதிப்புக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. எதிர்கால கண்ணோட்டம் சமீபத்தில், 88.36 என்ற அதிகபட்ச மதிப்புக்கு உயர்ந்த இந்திய ரூபாய், இனி 87.50 முதல் 88.40 என்ற வரம்புக்குள் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் பலவீனமான வேலைவாய்ப்பு தரவுகளும், வட்டி விகிதங்கள் குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகளும் ரூபாய்க்கு ஆதரவு அளித்தாலும், தற்போதைய வரிகள் ரூபாயின் தொடர்ச்சியான முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்தக்கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை