மியூச்சுவல் பண்டு யூனிட்டுகளை பரிசாக கொடுக்கலாமா?
மியூச்சுவல் பண்டு யூனிட்டுகளை பரிசாகக் கொடுக்கலாமே? அது ஒரு நல்ல சொத்தாக இருக்குமே என்று பலரும் கருதுகின்றனர். ஆனால், இதை ஆபரணங்கள் அல்லது வீடு, மனை போன்று அவ்வளவு எளிதாகக் கொடுத்துவிட முடியாது. இது ஒரு மூலதன சொத்து. இதற்குப் பின்னால் வரி மற்றும் பரிமாற்றத்துக்கான கடுமையான விதிமுறைகள் உள்ளன. பொதுவாக உறவினர்களுக்கு பரிசாகக் கொடுக்கும்போது, அதற்கு எந்த விதமான வரியும் கிடையாது. ஆனால், நாளை அந்த உறவினர், இதே மியூச்சுவல் பண்டு யூனிட்டுகளை விற்பனை செய்யப் போகும்போது, எப்போது அந்த யூனிட்டுகள் வாங்கப்பட்டனவோ, அந்தத் தேதியில் இருந்து கணக்கிட்டு, மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். இன்னொரு அம்சமும் இங்கே முக்கியமானது. காகித வடிவில் வைக்கப்பட்டிருக்கும் மியூச்சுவல் பண்டு யூனிட்டுகளை, சுலபமாக பரிசாக கொடுக்க முடியாது. அவற்றை முதலில் 'டீமேட்' வடிவுக்கு மாற்ற வேண்டும். ஆனால், இதிலும் சில விதிவிலக்குகள் உள்ளன. உதாரணமாக, இரண்டு பேர் ஒரு காகித மியூச்சுவல் பண்டு திட்ட யூனிட்டுகளை வைத்திருந்து, அதில் ஒருவர் மறைந்து விட்டால், இன்னொரு இணை ஹோல்டரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றால், அதைச் செய்ய முடியும். முதியவர் ஒருவருடைய நாமினியாக இருந்து, காகித யூனிட்டுகளைப் பெறுபவராக இருந்தால், நாளை அவர், அந்த முதியவரின் வாரிசுகளுக்கு அந்த யூனிட்டு களை மாற்றித் தர முடியும். மைனராக இருக்கும் ஒருவர் மேஜராக ஆகும்போது, தன்னுடன் தனது பெற்றோரையோ, கார்டியனையோ, இணை ஹோல்டராக சேர்த்துக்கொள்ள விரும்பினால், அப்போது செய்ய முடியும். இவையெல்லாம் எல்லா தருணங்களிலும் பொருந்தாது. ஆனால், இப்படிப்பட்ட வழிமுறைகள் இருக்கின்றன. இதுபோன்ற சந்தர்ப்பங்கள் ஏதுமில்லாமல், வழக்கமான வழியில், உறவினருக்கு காகித யூனிட்டுகளை பரிசாக கொடுக்க வேண்டும் என்றால், அதை முதலில் டீமேட் வடிவுக்கு மாற்ற வேண்டும். அதை உங்களுடைய டிபாசிட்டரிடம் பார்ட்டிசிபென்டிடம் ஒரு விண்ணப்பமாக கொடுக்கலாம். அல்லது 'டீமான்' இணையதளம் வாயிலாகவும் செய்யலாம். டீமேட் வடிவில் மாற்றிய பின், யூனிட்டுகளைப் பரிசாக கொடுப்பது சுலபம். அதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். பரிமாற்றக் கட்டணமாக, பரிசாக கொடுக்கும் யூனிட்டுகளின் மொத்த மதிப்பில் 0.03 சதவீதம் அல்லது 25 ரூபாய், இதில் எது அதிகமோ அதைச் செலுத்த வேண்டும். இதோடு 18 சதவீதம் ஜி.எஸ்.டி., மற்றும் 0.015 சதவீதம் முத்திரைத் தாள் கட்டணம் செலுத்த வேண்டும். டீமேட் வடிவில் இல்லாத யூனிட்டுகளை பரிசாக கொடுப்பதற்கு தடை இருப்பதற்கு முக்கியமான காரணம், அதை வைத்துக்கொண்டு வரி ஏய்ப்பு நடைபெறலாம். முறைகேடான பரிமாற்றம் நடைபெறலாம் என்பது தான். இதெல்லாவற்றுக்கும் மாற்றாக ஒரு வழிமுறை சொல்லப்படுகிறது. ஒருவர் தன் மகன் அல்லது மகள் பெயரில், நேரடியாக கணக்குத் துவங்கி, தான் கார்டியனாக இருந்துகொண்டு, அவர் பெயரிலேயே யூனிட்டுகளை வாங்கிப் போடலாம். 18 வயது ஆனபின், அந்த இளைஞரே தன் முதலீடுகளைத் தானே பார்த்துக்கொள்ளலாம்.