கமாடிட்டி சந்தை
செம்பு
விலையை உயர்த்திய வினியோகம் லண்டன் மெட்டல் எக்சேஞ்சில், செம்பின் விலை டன் ஒன்றுக்கு 10,000 டாலரை தாண்டியது. இந்திய பொருள் வாணிப சந்தையில், செம்பு விலை கிலோ 900 ரூபாயை தாண்டி, வர்த்தகமாகி வருகிறது. சந்தையில் தேவைக்கு குறைவான வினியோகம் இருப்பதன் காரணமாக, விலை உயர்ந்து வர்த்தகமாகிறது. மேலும், உலகின் மிகப்பெரிய தங்க மற்றும் செம்பு சுரங்கங்களில் ஒன்றான இந்தோனேஷியாவில் உள்ள ப்ரீபோர்ட்- மக்மோரான் நிறுவனத்தின் கிராஸ்பெர்க் சுரங்கத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சனைகளால், தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதால், சுரங்கத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. உலகின் மிகப்பெரிய செம்பு சுரங்கங்களில் ஒன்றான கிராஸ்பெர்க் மூடப்பட்டதால், சந்தையில் வினியோகம் தடைபடுமென்ற அச்சமும் விலை உயர்வுக்கு காரணமாக இருந்தது சீனாவின் நிலையான இறக்குமதிகள், பலவீனமான அமெரிக்க டாலர், மற்றும் அமெரிக்க வட்டி விகிதங்கள் குறையும் என்ற எதிர்பார்ப்பு இவை அனைத்தும் செம்பின் முதலீட்டு கவர்ச்சியை அதிகரித்தன. கச்சா எண்ணெய்
தேவையைவிட வினியோகம் அதிகரிக்கும் சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 63 டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச எரிசக்தி நிறுவனம் வெளியிட்ட தகவல் படி, உலகளாவிய கச்சா எண்ணெய் வினியோகம், தேவையின் அளவை விட வேகமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற ஓபெக் பிளஸ் கூட்டமைப்பு நாடுகளின் கூட்டத்தில், அக்டோபர் மாதம் முதல், உற்பத்தியை அதிகரிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இதுவே சந்தையில் வினியோகம், -தேவை ஆகியவற்றின் சமநிலையினை குலைக்கும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சவூதி அரேபியா, ஓபெக் பிளஸ் கூட்டணியின் மிகப்பெரிய உற்பத்தியாளர் நாடு. இந்நாடு சீனாவுக்கு குறைந்த விலையில் எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் தீவிரமாக உள்ளது. அக்டோபர் மாத ஏற்றுமதி, தினசரி 16.50 லட்சம் பீப்பாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது, செப்டம்பர் மாத ஏற்றுமதியான 14.30 லட்சம் பீப்பாயிலிருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.