கமாடிட்டி சந்தை
அலுமினியம் அமெரிக்க வரியால் அழுத்தம் அ லுமினியம் விலை, கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு டன் 2,350 அமெரிக்க டாலர் என்ற நிலையில் இருந்து, தற்போது சுமார் 2,690 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. எல்.எம்.இ., எனும் லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்ச் கண்காணிப்புக்கு கீழ் உள்ள அலுமினியம் கையிருப்புகள் 30,000 டன்களுக்கு மேல் உயர்ந்து, கிட்டத்தட்ட 5.14 லட்சம் டன் ஆகி உள்ளது. மலேசியாவின் போர்ட் கிளாங் துறைமுகத்தில் ஏற்பட்ட புதிய வரவுகள் இதற்குக் காரணம். இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், அலுமினியம் இறக்குமதி சுங்க வரியை 50 சதவீதமாக உயர்த்திய முடிவு எதிர்மறையாகப் பாதித்துள்ளது. இந்த வரி, அமெரிக்காவின் பிராந்திய அலுமினியம் பிரீமியங்களை உயர்த்தக்கூடும். ஆனால் அமெரிக்க தேவை மந்தமாவதும், வினியோகம் பிற சந்தைகளுக்கு மாற்றப்படுவதும், உலகளாவிய எல்.எம்.இ., விலைகளை அடுத்த மாதங்களில் கட்டுப்படுத்தவோ அல்லது அழுத்தத்திற்குள் கொண்டு வரவோ செய்யக்கூடும். துத்தநாகம் கையிருப்பு வீழ்ச்சியால் உயர்வு து த்தநாகம் விலை, கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு டன் 2,850 அமெரிக்க டாலர் என்ற நிலையில் இருந்து, தற்போது கிட்டத்தட்ட 2,920 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. ஏப்ரல் மாதத்திலிருந்து லண்டன் மெட்டல் எக்சேஞ்ச் துத்தநாக கையிருப்புகள் 75% வீழ்ச்சி அடைந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளன. சீனாவின் சுத்திகரிக்கப்பட்ட துத்தநாக உற்பத்தி ஆகஸ்டில் 23 சதவீதம் உயர்ந்து, 6.51 லட்சம் டன்களுக்கு (17 மாதங்களில் அதிகபட்சம்) சென்றுள்ளது. தாதுவின் கிடைப்பும், அதிகரித்த ட்ரீட்மென்ட் சார்ஜ்களும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உதவியது. 2025ம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் உற்பத்தி 5 சதவீதம் உயர்ந்து 48 லட்சம் டன் என்ற நிலைக்கு சென்றுள்ளது.