கமாடிட்டி
அலுமினியம் ச ர்வதேச சந்தையில், அலுமினியம் விலை தொடர்ந்து மூன்றாவது மாதமாக அதிகரித்து வருகிறது, தற்போது 2022 ஜூன் மாதத்திற்கு பின், அதிகபட்சமாக ஒரு டன் விலை 2,790 அமெரிக்கன் டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சந்தையில் கனிம வரவு பாதிப்புக்கு உள்ளாகியதும், அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவும், கையிருப்புகள் குறைந்ததும் இந்த விலை உயர்வுக்கு காரணமாக அமைந்தன. இதன் எதிரொலியாக, உள்நாட்டு சந்தையிலும் அலுமினியம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் விலையை உயர்த்தி உள்ளன. கினியா அலுமினியா பாக்சைட் நிறுவனத்தின் அனைத்து சுங்க உற்பத்தி அனுமதிகளையும், கினியா அரசு, சுங்கவரியில் ஏற்பட்டுள்ள ஊழலால் ரத்து செய்தது. இதனால் உலகின் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான எமிரேட்ஸ் குளோபல் அலுமினியம் நிறுவனத்திற்கு, அலுமினிய உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளான பாக்சைட் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விலை உயர்ந்து காணப்படுகிறது. கச்சா எண்ணெய் க ச்சா எண்ணெய் விலை, கடந்த வார சரிவில் இருந்து மீண்டு, தற்போது ஒரு பேரல் 62.30 அமெரிக்க டாலர் என்ற நிலையில் வர்த்தகம் ஆகி வருகிறது. அமெரிக்கா, ஜூலை மாதத்தில் தினசரி 13.6 மில்லியன் பேரல் உற்பத்தி செய்தது என்று அமெரிக்க எரிசக்தி தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது, ஜூன் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட உற்பத்தியை விட உயர்வாகும். மேலும் இது அமெரிக்காவின் வரலாற்றிலேயே அதிகமான உற்பத்தி நிலையாகும். அத்துடன், அமெரிக்க எரிசக்தி தகவல் ஆணையம் 2025 மற்றும் 2026 ஆண்டுகளில் மெக்சிகோ வளைகுடாவில் நடைபெறும் எண்ணெய் உற்பத்தி கணிப்பை உயர்த்தியுள்ளது. சந்தையில் தேவைக்கு அதிகமாக கச்சா எண்ணெய் உற்பத்தி இருக்கும் என்ற எதிர்பார்ப்பால், விலை அதிகரிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.